படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

1 அக்., 2010

ஷஹீத் பழனி பாபா வாழ்க்கை சுருக்கம்

பழனிபாபா

பாபா அவர்களின் தந்தை பெயர் முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது புது ஆயக்குடி என்னும் கிராமம். இதுதான் தாய்வழி பூர்வீகம். தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும் குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றனர். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புது ஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் பாசப்பிணைப்புகளை விட்டு விலகி வாழ்ந்து வந்தார். இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் பாபா.
எம். ஜி. ஆர். ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னைக் கோட்டைக்குள் நுழையத் தடை என அரசானை வெளியானவுடன் தான் யார் இந்த பழனிபாபா என்று மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். இந்த சந்தர்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக பாபா அவர்கள் மூலம் எம்.ஜி.ஆரை வசைபாட மேடை அமைத்துத் தந்தது.
எம். ஜி. ஆர். மறைவுக்குப்பின் ஆட்சியமர்ந்த திமுக, இந்து மேல் ஜாதி சமூகத்தினரின் வெறுப்பை சம்பாதித்து கொள்ள விரும்பாத கலைஞர் அரசு பாபா அவர்களின் மேல் முதன்முறையாக குண்டர் சட்டத்தைபிரயோகித்து சிறைக்குள் தள்ளியது.
திமுக அரசும் தனது முதுகில் குத்திய போது பாபாவின் சமுதாய பார்வை புதியபாதை காண வைத்தது. அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவாளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்க வைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), கொடிய தடாசட்டம் ஆகியவைகளும் அவரை பதம் பார்த்தன.
முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்தது.
பின்தொடர்ந்தோர் சிறிது காலம் மருகி நின்றபோதும் பழனிபாபா அவர்கள் மனம் தளரவில்லை. தனது இருதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் மணம் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். இஸ்லாமிய மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அல்லாஹ்வின் பாதையில் அணி திரட்டினார். இந்த காலகட்டத்தில் தான் மதவெறி சக்திகளுக்கு பழியாகிய பாபா, 1997 ஜனவரி 28ஆம் நாள் (ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் முதல்நாள்) இரவு ஒன்பதரை மணிக்கு தனது வாகனமான ஜீப்பில் அமர்ந்திருந்த பாபா அவர்களை 6 பேர் கொண்ட கொலைவெறி கும்பலால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். (இன்னாலில்லாஹி..,)
பாபா அவர்களின் காலத்தில் தனது வீரவுரைகளில் ஒன்றை மட்டும் அடிக்கடி வலியுறுத்துவார், 'இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல' என்பார். மாற்று மதச் சகோதரர்களின் அமைப்புகள் துணிந்த அளவு கூட நமது சமுதாயத்தின் அமைப்புகள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.
அவர் கூறிய தத்துவத்தை உள்வாங்கி இயக்கங்கள் மூலம் உண்டான பிணக்குகளை களைந்து இஸ்லாமிய சமூகத்தின் வெற்றிக்கு அல்லாஹ்வின் பாதையில் அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.

கொள்கை மாறா மறவனே..! 

அரசியல் அரங்கில் அனாதைகளாக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை 'உன் வெற்றி உன் கைகளில்' என்று கூறி அறுபதுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றெடுக்க முடியும் என தன் சமூகத்திற்கு தெளிவுபடுத்தி, அனைத்து ஜமாஅத்துகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதற்கு ஐக்கிய ஜமாஅத் பேரவை எணும் பெயரிட்டு தனது இறுதிக் காலங்களில் சூறாவளிப்பயணம் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். தனது எழுச்சியுரையின் மூலம் தமிழின சமூகத்திற்கே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மார்க்கத்தால் இஸ்லாமியன்
இனத்தால் திராவிடன்
மொழியால் தமிழன்
தேசத்தால் இந்தியன்
,

எனும் புரட்சிமிகு சிந்தனையை இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில் விதைத்தார்.
தலித் இன சமூக மக்களின் விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர்அம்பேத்கர் அவர்களை தனது வரலாற்று உரைகளின் மூலம் இஸ்லாமியர் சமூகத்திற்கு அடையாளம் காட்டியவர் பழனிபாபா அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அம்பேத்கார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத அரசியல் கட்சியை அடியோடு புறக்கணித்து விடு என ஒரு புதிய பாதையை அரசியல் களத்திலே வகுத்து தந்தவர்.

சிம்மாசனங்கள் அவரை சிறைபடுத்திய போதும் சீரான என் மார்க்கத்தை விட்டு சிறிதளவும் பிரளமாட்டேன் என்று வெற்றிக்கும் வீர மரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதன் தான் பழனிபாபா.

சொல்லாலும், செயலாலும், புறத்தாலும், அகத்தாலும், தியாக உணர்வு ஒன்றையே நிலைப்படுத்தினார். இஸ்லாம் எனும் கட்டிடம் தியாகம் எனும் அஸ்திவாரத்தினால் உருப் பெற்றது என உலகுக்கு உணர்த்தினார். இஸ்லாமிய சமூகத்திற்குள் அனேக அரசியல் பிரிவுகள் இருக்கலாம் ஆனால், இஸ்லாமியர்கள் மத்தியில் பிளவுகளே இருக்கக்கூடாது, முடியாது என மேடைக்கு மேடை தனது சொற்பொழிவால் பிரகடணப்படுத்தினார்.

இன்றைய காலகட்டத்தில் பாபா அவர்கள் இருந்திருக்கக்கூடாதா..?என உணர்ச்சிமிக்க இளைஞர்கள் பலர் வெளிப்படையாகவே வருத்தமுறுவதை செவியுறும்போது பாபா அவர்கள் வகுத்துத்தந்த பாதையே இறுதித் தீர்வாக இருக்க முடியும் என அறியமுடிகிறது

பழனி பாபா படுகொலை




ஜிஹாத் கமிட்டி தலைவர் பழனிபாபா 28.1.97 அன்று பொள்ளாச்சியில் படுகொலை செய்யப்பட்டார். 1980-களில் தனது மேடைப் பேச்சால் பல சர்ச்சைகளை கிளப்பிய பாபாவிற்கு பொதுமேடைகளில் பேசக்கூடாது என தடை உத்தரவே போட்டார் எம்.ஜி.ஆர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோபிசெட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கூட்டி வைத்து, மைக் வைத்து தனது கருத்துக்களை பேசிய பாபா, "மக்கள்கிட்ட பேசுறதும், உங்ககிட்ட பேசுறதும் ஒன்றுதான்" என முடிவில் கமென்ட்டும் அடித்தார்.

இவர் கடந்த இருபது ஆண்டுகளில் நான்கு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், 80 சாதாரண வழக்குகளிலும் சுமார் 130 முறை சிறைசென்று திரும்பியவர். புள்ளிவிபரங்களுடன் ஆதாரபூர்வமாகவும், தனது கருத்துக்களை மேடைகளில் பேசிவந்த பாபாவை முஸ்லிம் மக்களின் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் நிஜம்.

" நாமெல்லாம் மைனாரிட்டி மக்கள் எல்லோரையும் அனுசரித்துத்தான் போகனும். பாபா மீட்டிங் பேசிட்டு போனால் மறுநாளே இந்து- முஸ்லிம்களுக்கிடையே வெட்டு, குத்து, கலவரம்னு ஆயிடுது" என பாபாவை பார்த்து ஒதுங்கிய முஸ்லிம்களும் உண்டு.

"ரோஜா செடியில் முள்ளாக இருப்பதைவிட,கள்ளிச்செடியில் மலராக இரு" என தனது ஜிஹாத் தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிவருவார் பாபா. ஒருகாலத்தில் மேடைகளில் பரபரப்பாக பேசி பிரபலமான பாபா, கடந்த சில வருடங்களாகவே தனது ஜிஹாத் கமிட்டியின் பிரச்சாரத்தை சைலன்ட்டாக, அதேசமயம் ஆக்கப்பூர்வமாக செய்துவந்தார்.

ஊர் ஊராக சென்று முஸ்லிம் இளைஞர்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து, வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்களிடமெல்லாம் கடிதத்தொடர்பு கொள்வதுடன், தனது பிரச்சார ஆடியோ, வீடியோ கேசட்டுகளை அனுப்பி அவர்களிடம் ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் பெற்று ஜிஹாத் கமிட்டி மூலம் பல ஏழைஎளிய முஸ்லிம் மக்களுக்கெல்லாம் பண உதவி செய்யும் வேலையை செய்து வந்தார்.

தடா கைதிகளின் குடுப்பத்தினர் விலாசங்களையெல்லாம் சேகரித்து, மாதாமாதம் அவர்களின் குடும்பச்செலவிற்கு பணம், மணியார்டர் செய்து வந்த பாபாவிற்கு, முஸ்லிம்களை விட இந்துக்களே நெருக்கமான நண்பர்களாக இருந்துவந்தார்கள். பாபாவிடம் உதவியாளராக இருந்தவர் ஒரு பிராமணர். சென்ன்னை பெரம்பூர் ஜவஹர் நகரில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில்தான் பலவருடங்களாக வாடகைக்கு குடியிருந்துவந்தார் பாபா.

கடந்த இரண்டரை வருடங்களாக சென்னை வாழ்க்கையை தவிர்த்து, பொள்ளாச்சியில் தனது நண்பரின் வீட்டில் இருந்துவந்த பாபா, சென்னையில் கோர்ட், வழக்கு என்றால் மட்டும் வக்கீலின் அறிவுரைப்படி சென்னை வந்து வேலை முடிந்ததும் உடனே பொள்ளாச்சி திரும்பிவிடுவார்.

எதிரிகளால் தனக்கு திடீர் மரணம் உண்டு என பாபா எதிர்பார்த்தவர்தான். ஆனால் சர்ச்சைக்குள்ளான காலகட்டத்தை கடந்து அமைதியாக தனது பணியைசெய்துவந்த பாபாவை எதிரிகள் தற்போது படுகொலை செய்திருப்பதுதான் போலிசுக்கே புரியாத புதிராக உள்ளது. பாபாவின் உடல் அடக்கத்திற்கு புதுஆயக்குடி வந்திருந்த பா.ம.க தலைவர் ராமதாஸ் இறுதி அஞ்சலி கூட்டத்தில் பேசும்போது " தற்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கு எதிராக தீயசக்திகள் இப்படி ஒரு அசம்பாவிதத்தை அரங்கேற்றியிருக்குமோ என எண்ணுகிறேன்" என்றார்.

கொலை நடந்தது எப்படி?

பாபாவின் கொலை சம்பவத்தை நேரடியாக பார்த்த பாபாவின் நண்பர் பசுவராஜ் தனபாலை சந்தித்தோம்.

"முப்பது வருஷமா எங்க குடும்ப நண்பரா இருந்து வந்தவர் பாபா. அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து போகும் பாபா, குடும்ப விஷயங்களைப் பற்றித்தான் பேசுவாரே தவிர, மதப்பிரச்சனைகள், அரசியல் என்று எதையும் பேசமாட்டார். என்னைப்போல பல இந்துக்களும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள்தான். 28- 1 - 1997 அன்று இரவு ஏழெகால் மணிக்கு தனது ஜீப்பில் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நான் வீட்டில் இல்லை. எட்டரை மணிக்குத்தான் நான் வீட்டிற்கு வந்தேன். இரவு ஒன்பதரை மணிவரை எங்களுடன் பேசிவிட்டு விடைபெற்றார். புறப்படுவதற்கு பாபா ஜீப்பில் ஏறி அமர, நான் அவர் கையில் கொண்டு வந்த புறாக்கூண்டை மறுபக்கம் ஜீப்பில் வைத்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த கொடூரம் நடந்தது.

கையில் சிறிய கோடாலி போன்ற ஆயுதத்துடன் பாபாவை நெருங்கிய அந்த மர்மமனிதன் திடீரென பாபாவின் தலை, நெஞ்சு, உடல் என சரமாரியாக வெட்டினான். டேய்...டேய் என சத்தமிட்டுக்கொண்டே அவனை நான் விரட்ட மேற்கு வீதியை நோக்கி ஓடியவன் அங்கு நின்றிருந்த அம்பாசிடர் கார் ஒன்றில் தொற்றிக்கொண்டான். உடனே வெடிகுண்டையும் எடுத்து அவன் வீச, ஒரே புகை மண்டலமாகிவிட்டது. அப்படியும் கொலையாளியை துரத்தி ஒரு அடி தூரத்தில் பிடித்த போது, " நீ எனக்கு குறி இல்லை; போடா ஒதுங்கி" என என்னைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டான் அவன். அதற்குள் என் பின்னாலேயே அக்பர் என்பவரும் ஓடிவந்தார்" என்றார் பசுவராஜ் தனபால்.

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி