தொண்டு நிறுவனங்களா - குண்டு நிறுவனங்களா?
Add caption |
சங் பரிவார்க் கும்பல் நாட்டில் பல பாகங்களிலும் நடைபெற்றுவரும் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட் டுள்ளது என்பதற்கு நாளும் ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. தெற்கே தென்காசி தொடங்கி, மாலே கான், அய்தராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர், ராஜஸ் தானின் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு கோவா, கான்பூர் முதலிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் எல்லாம் சங் பரிவார்க் கும்பலின் ஈட்டி முனையான ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்பான அபிநவ் பாரத் முதலியவை சம்பந்தப்பட்டுள்ளன. ஒரு வலைப் பின்னல் (நெட் ஒர்க்) இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
காந்தியார் படுகொலையின்போது ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு ஏற்பட்டதுபோன்ற நெருக்கடி இப்பொழுது ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மத்தியிலே பேசப்படுகிறது; எந்த நேரத்தில் யார் கைது செய்யப்படுவார்களோ என்ற அச்சம் அவர்களைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது.நயவஞ்சகமாகவும், தந்திரமாகவும், இரகசியமாகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எப்படியும் ஒரு கட்டத்தில் அம்பலத்துக்கு வரத்தான் செய்யும் - அந்தக் கட்டம் காவிக் கும்பலுக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
மிதவாதிகள், தீவிரவாதிகள் என்பதெல்லாம் அந்தக் கும்பலில் கிடையவே கிடையாது.
மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவுவதற்குப் பாசிஸ்டுகள் கையாளும் நடைமுறை தந்திரம் அது. தீவிவராதி அத்வானி என்று சொன் னால், மிதவாதி என்று இன்னொருவரை காட்டி அவர் பரவாயில்லை என்னும் பொதுமக்கள் மத்தியிலே ஏற்படுத்திட மேற்கொள்ளப்படும் தந்திரமும், யுக்தியு மாகும் இது.
சாத்மிகவாதி என்று விளம்பரப்படுத்தப்பட்ட அடல்பிகாரி வாஜ்பேயிகூட அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மறுநாள் நடக்கப் போகும் வன்முறையைச் சூசகமாகச் சொல்ல வில்லையா?
சமன் செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து பஜனை செய்வார்கள் கரசேவகர்கள் என்றால் அதன் பொருள் என்ன? பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி சமன் செய்து, அதன்மீது அமர்ந்து பஜனை செய்வார்கள் என்பதைத்தானே கவித்துவக் கொழுப்பு வடிய வன்முறைக்குப் பூண் போட்டுப் பேசினார்.இப்படிப் பேசப்படும் நயவஞ்சகப் பேச்சைவிட நேரடியாக இடி! என்று சொல்பவர்கள் நேர்மையான வர்கள் என்று கூடச் சொல்லலாம்.
இந்தச் சங் பரிவார்க் கூட்டத்துக்கு வெளிநாடு களிலிருந்து கிடைக்கும் பொருளாதார உதவி அபரிமிதமானது.
விசுவ இந்து பரிஷத்துக்கு இதே வேலைதான். உள்நாட்டிலும் பெரிய பெரிய பண முதலாளிகள் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்குப் பணத்தை வாரி விடுகின்றனர்.
ராஜபாளையத்தில் தொழில் அதிபர்களிடம் காஞ்சி சங்கராச்சாரியார் என்ன பேசினார்?
தொழிலதிபர்களே! கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் ஆர்.எஸ்.எஸை ஆதரியுங்கள். நீங்கள் இப்பொழுது அதை ஆதரிக்காமல், பின் எப்பொழுது ஆதரிக்கப் போகிறீர்கள்? மற்ற மதக்காரர்களும், நாத்திகர்களும் உங்களை ஆதிக்கம் செய்த பிறகுதான் ஆர்.எஸ்.எஸை ஆதரிக்கப் போகிறீர்களா? (ஆர்.எஸ்.எஸின். அதிகாரப்பூர்வ ஏடான - ஆர்கனைசர் 28.3.1982).
இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால், சங் பரிவார் வட்டாரத்துக்கு நிதி எப்படி பொத்துக்கொண்டு கொட்டுகிறது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
இப்பொழுது வெளிவந்துள்ள செய்தி மிகவும் முக் கியமானது, தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ்., வகையறாக்களுக்கு உதவி செய்கின்றன என்பதுதான் அந்தத் தகவல். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சில ராஜஸ்தான், அஜ்மீர் நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பது வெளிச் சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகர் பட்டிதார் என்பவர் மூலம் இந்த வகையில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. சி.பி.அய்.யும் விசாரணையைத் தொடங்கிவிட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல வகைகளிலும் நிதியைப் பெற்றுக்கொண்டு இருக்கின் றன. இதன் நிருவாகிகள் காவிப் பரிவார்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவர வாய்ப்புண்டு.
சுருக்கமாகச் சொன்னால், காவி தீவிரவாதம் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னதற்கான வலுமிக்க ஆதாரங்கள் நாளும் கிடைத்து வருகின்றன. நடுவண் அரசு மதவாத இந்துத்துவா போக்கைக் கைவிட்டு, இந்துத்துவா வன்முறையாளர்களுக்குக் கைவிலங்கு போடுவதில் தயக்கம் காட்டக் கூடாது - கூடவே கூடாது!
--------------------- "விடுதலை” தலையங்கம் 9-9-2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக