‘காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை’ என்று பிரபல சிந்தனையாளரும், ஆற்றல் மிக்க எழுத்தாளருமான அருந்ததிராய் வெளியிட்ட கருத்தில், எந்தக் குற்றமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. அருந்ததிராய் மீது தேச துரோகக் குற்றச்சாட்டை ‘தேச பக்தர்கள்’ வீசுகிறார்கள். வழக்குத் தொடருவதற்கு இந்திய ஆட்சி ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன. அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள், பார்ப்பன ஏடுகள் கூக்குரலிடுகின்றன.
காஷ்மீர் மக்கள் மீது ராணுவ ஆட்சியைத் திணித்து,அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை துப்பாக்கி முனையில் பறித்து வைப்பதற்குப் பெயர்தான் தேச பக்தியா என்று கேட்க விரும்புகிறோம். தேச பக்தர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.
• காஷ்மீர் இந்தியாவில் இணைக்கப்பட்டபோது அங்கே, ஹரிசிங் என்ற இந்து மன்னராட்சி நடந்தது;மன்னருக்கு இந்தியாவின் வைஸ்ராய், மவுண்ட்பேட்டன் எழுதிய கடிதத்தில் இந்தியாவுடனான இணைப்பு, காஷ்மீர் மக்களின் வாக்கெடுப்பு ஒப்புதல் பெற்ற பிறகே இறுதி செய்யப்படும் என்று உறுதி கூறினாரே; (27, அக். 1947)வாக்கெடுப்பு நடத்தப்பட்டதா?
• “காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்; அய்.நா. போன்ற சர்வதேச அமைப்புகளின் மேற்பார்வையில், அம்மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும்”என்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவிக்கு வந்த ஜவகர்லால் நேரு, காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே உறுதி அளித்தாரே (2 நவ. 1947); சொன்னதை செய்தாரா?
• காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதற்காகவே இந்தியா, பாகிஸ்தானுக்காக, அய்.நா. இரண்டு ஆணையங்களையே உருவாக்கியதே (1948, ஜனவரி);உண்டா? இல்லையா?
• சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும் என்று 1948-லிருந்து1957 வரை அய்.நா.வின் பாதுகாப்புக் கவுன்சில் மீண்டும் மீண்டும் தீர்மானங்களை நிறைவேற்றியதே; மறுக்க முடியுமா?
• காஷ்மீர் மக்களுக்காக வரையறுக்கப்பட்ட சுயாட்சி வழங்கப்பட்டு அதற்காக, அரசியல் சட்டத்தில் 370வது பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது உண்டா? இல்லையா? (1952,
நவம்பர் 17) அடுத்த ஓராண்டிலிருந்தே 1953 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டிருந்த ஓரளவு உரிமைகளும் கட்டாயப்படுத்தியும், அச்சுறுத்தியும், சூழ்ச்சிகளாலும் படிப் படியாகப் பறிக்கப்பட்டு, மக்கள் கிளர்ச்சிகளை ஆயுத முனைகளில் ஒடுக்கி, காஷ்மீரை ஒரு “போலீஸ் அரசாக”மாற்றியது யார்? இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சியா?இல்லையா?
• தான் கொடுத்த வாக்குறுதியையே மீறி, காஷ்மீரில் வாக்கெடுப்பு என்ற கேள்விக்கே இடமில்லை என்று நாடாளுமன்றத்திலேயே நேரு அறிவித்தாரே; (1956) அது துரோகமா, இல்லையா?
• 1957 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீரில் நடத்தப்படும் தேர்தல்கள் எல்லாம் ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் கூத்துகளாகவே நடந்தன என்பதும், நேருவின் உறுதி மொழியை எடுத்துக்காட்டிய அரசியல் தலைவர்களும்,பணியாளர்களும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் உண்டா?இல்லையா?
• டில்லியின் எல்லை மீறிய அதிகார ஊடுருவலை எதிர்த்து, 1987 மார்ச் மாதத்தில் ‘முஸ்லீம் அய்க்கிய முன்னணி’ ஒன்று உருவானது. தேர்தல் தில்லுமுல்லுகளையும், டெல்லியின் அத்து மீறலையும்,எதிர்த்துப் போராடிய அந்த முன்னணி தோழர்களை இந்திய போலீசும், உளவுத் துறையும் மூர்க்கத்தனமாக ஒடுக்கியது உண்மையா? இல்லையா?
• இந்திய பார்ப்பன ஆட்சியின் தேர்தல் அரசியல் மோசடிகளை உணர்ந்து கொண்ட பிறகு தான், இளைஞர்கள்1989 ஆம் ஆண்டில் தங்களின் விடுதலைக்கான போராட்டத்தை தொடங்கினார்கள் என்பதை மறுக்க முடியுமா?
• 1990-ல் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் விடுதலைக்கான மக்கள் போராட்டம் வெடித்தபோது,ஆயுதமில்லாத அப்பாவி இளைஞர்களையும் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய (செங்கோரா, தெங்டோரா பகுதிகளில்) இளைஞர்களையும் ராணுவம் வேட்டையாடி பிணமாக்கியது உண்டா, இல்லையா?
• 1990 இல் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் ‘காட்டுமிராண்டி’ சட்டத்தைக் கொண்டு வந்து (ஹசஅநன குடிசஉநள ளுயீநஉயைட ஞடிறநசள ஹஉவ) காஷ்மீரில் முழு அதிகாரம் கொண்ட ராணுவ ஆட்சியை நடத்தி வருவது உண்மையா? இல்லையா? அதற்குப் பிறகு சொந்த மண்ணிலேயே காஷ்மீரிகள் கைதிகளாக்கப்பட்டதோடு,சோப்போர், கவக்தால், பிஜ்பேகரா உள்ளிட்ட பல பகுதிகளில் மனித வேட்டை நடத்தி, ரத்த ஆற்றை ராணுவம் ஓடச் செய்தது உண்டா? இல்லையா?
• உலகிலேயே மிகப் பெரும் ஜனநாயக நாடு இந்தியா என்று தம்பட்டமடித்துக் கொண்டு, உலகிலேயே மிகப் பெரும் ராணுவ மண்டலத்தை உருவாக்கி வைத்திருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? காஷ்மீரில்50 லட்சம் மக்களைக் கட்டுப்படுத்த 4 லட்சம் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்டவர்கள் 90000 பேர். ராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை9000-க்கும் அதிகம். 11 சதவீத காஷ்மீர் பெண்கள் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
(ஆதாரம்: எல்லை கடந்த மருத்துவர்கள் குழுவின் ஆய்வு அறிக்கை)
காஷ்மீர் மக்களின் சுயாட்சி உரிமையைப் பறித்ததை 1956ஆம் ஆண்டிலேயே பெரியார் ‘பார்ப்பனர்களின் காலித்தனம்’என்று கண்டித்தார்.
ஒரு தேசிய இன மக்களின் உரிமைகளை ராணுவ முனையிலேயே பறித்து வைத்துக் கொண்டு கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, நம்பிய மக்களுக்கு துரோகம் இழைப்பதுதான் தேச பக்தியா? இந்த துரோகத்தை சுட்டிக்காட்டி, துணிவுடன் உண்மையை உரக்கக் கூறும் அருந்ததிராய்கள் தேச விரோதிகளா? பதில் சொல்லட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக