சேலம் அருகே குடோனில் 160 மூட்டை வெடிபொருள் பறிமுதல்
சேலம், நவ. 19-
சேலம் அருகே ஜவ்வரிசி பேக்டரி குடோனில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 160 மூட்டை வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சூப்பிரவைசர் கைது செய்யப்பட்டார்.
சேலத்தை அடுத்த ஏ.என்.மங்கலம் ஏரிக்கரையோரம் வவ்வால்தோப்பு என்ற இடத்தில் ஜவ்வரிசி ஆலை ஒன்றில் வெடிமருந்து தயாரிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சந்திரகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு 2 பெரிய அண்டாவில் அமோனியம் நைட்ரேட் என்ற உரத்துடன் ரசாயன பொருளை கலவை செய்து வெடிமருந்து தயாரிப்பதற்காக அதை பாகுபோல காய்ச்சிக் கொண்டிருந்தனர். அந்த பாகு, குடோனில் உள்ள தரைத்தளத்தில் குழாய் மூலமாக வடிந்து உறைந்தது. பின்னர் அவற்றை அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் மைசூர்பாகு போல அதை உடைத்து 50 கிலோ கொண்ட சாக்குப்பையில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
அதிகாரிகளை கண்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விற்பனைக்கு தயாராக இருந்த 160 மூட்டையில் இருந்த வெடிபொருட்களை கைப்பற்றினார்கள். இவற்றின் எடை 8 ஆயிரம் கிலோ ஆகும். வெடிமருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட சூப்பிரவைசர் கிருஷ்ணமூர்த்தி (வயது27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, உடைசல்பட்டியை சேர்ந்த சுருளிராஜன் என்பவர்தான் வெடிமருந்து தயாரிக்கும் தொழில் செய்வதாகவும், தனக்கு சுருளிராஜன் பெரியப்பா மகன் எனவும், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் குடோனில் தொழில் நடப்பதாகவும், இதுவரை 2 லாரிகளில் வெடிமருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சதித்திட்டத்திற்காக வெடிபொருள் பயன்படுத்தப்படுகிறதோ? என்ற எண்ணத்தில் உளவுத்துறை அதிகாரிகள், கியூ பிராஞ்ச் போலீசார் புலன் விசாரணை நடத்தினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக