படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

12 நவ., 2010

கவி நிலவு -அமீர் அப்பாஸ் கவிதைகள்

எல்லாம் அவன் வசம்
ஏழைப் பங்காளனின் ஆட்சி..!
எப்போதும் வாரி வழங்கும் வள்ளல்
மின்சாரத்தை வாரி வழங்குகிறான்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு..!
ஒரு வழியும் அற்ற மக்களுக்கு
நான்கு வழிச் சாலையைக்
காட்டுகிறார்கள்…!
வறுமையைக் கடக்க
கதியற்ற மக்களிடம்
கட்டிய பாலத்தைக் காட்டி
கடந்து போக சொல்கிறார்கள்..!
ஒட்டுக் கோவணத்தையும்
உருவிச் சென்றவர்கள்
கட்டிக்கச் சொல்லி
கரைவேட்டி தருகிறார்கள்..!
நாம் வாழும் உரிமையை
வன்முறையாய் பறித்துக் கொண்டு
"இலவசம் இலவசம்" என
எப்போதும் முழங்குகிறார்கள்..!
எல்லாம் அவன் வசமானது..!
ஆட்சி
அதிகாரம்
அரச வன்முறையால்
ஆளும் அவனை
அனைவரும் அடிபணிகிறார்கள்
ஆண்டவனைப் போல..!
எல்லாம் அவன் வசம்..!
கடைசி விவசாயியின்
கைகளில் மட்டும் விஷம்..!


கிழவி..!
திமிர்ந்த தேகத்தின்
கனிந்த மார்பு
கோயில் மணியின்
நாவுகளாய் தொங்குகிறது..!
புடைத்த நரம்புகள்-
தளர்ந்த கயிற்றுக்கட்டிலாய்
கழன்று கிடக்கிறது..!
கேள்விக்குறியாய் வளைந்த
கூன்-
மண்ணைப் பார்க்கிறது..!
எதிர்காலத்தின் ஏக்கத்துடன்..!
நிழலும் பிரிகின்ற..
நேரத்தைப் பார்த்த படி
காலக் கடிகாரத்தின் முள்
நின்று போகும் சூழலை
எதிர்பார்த்து சுற்றுகிறது...!
தன்னைத் தவிர..
யாரும் துணையில்லை..!
தன்னைப் போலிருக்கும்
சுருக்குப்பையை மட்டுமே
நேசிக்கிறாள் கிழவி..!



  
புதைக்கப்பட்ட நீதி..!

-அமீர் அப்பாஸ்.
 
இடித்தாலும்
வெடித்தாலும்..
அவர்கள் கரசேவகர்கள்..!

அதற்காக துடித்தாலும்
தொழுதாலும்
நாங்கள் பயங்கரவாதிகள்..!

இடிக்கப்பட்ட மசூதி
யாருக்கு சொந்தம்?
இடித்தவனுக்கு சொந்தம்..!

அயோத்தியில்
நிலத்தைப் பறிகொடுத்தவனுக்கு
ஒரு பங்கு..!
ஆக்ரமிப்பாளனுக்கு இரண்டு பங்கு..!

மதச்சார்பின்மைத் தேசத்தின்
மகத்தான தீர்ப்பு..!



இத்தனை நாளாய்
எழுத்துப் பிழையாய்
வாசித்திருக்கிறேன்..!
உயர்நீதி மன்றம் அல்ல
அது உயர்சாதி மன்றம்..!

நீதிமன்றத் தீர்ப்பை
அவமதிக்க கூடாது..!
ஆனாலும்-
நீதியை அவமதிக்கலாம்..!

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
இந்த பூமி திருந்தாது
ஏனெனில்
இது இராமஜென்மபூமி




பூணூல்கள்-
பாம்பாகி கொத்துகிறது
தடி கொண்டு அடிக்க
தடுக்கிறது சட்டம்…!


ஒரு முறை நீதி
புதைக்கப்படும் போது
ஆயிரம் அநீதிகள்
விதைக்கப் படுகிறது..!

ஒரு இரும்புக் கரம்
நம்மை ஒடுக்கும் போது..
ஒராயிரம் பயங்கரங்களாய்
அது வெடிக்கக் கூடும்..!

விதைத்தவர்கள் மறந்தாலும்
அறுவடைக் காலம்
அவர்களை மறப்பதில்லை..!



முறிந்த கிளையின் ஒடியும் சப்தம்..! 

திருப்பித் தர வலிமையற்ற


ஒருவனின் -                               

கடன் கேட்கும் தொனி..

தனக்குத் தானே பாடும்

இரங்கற்பா போன்றது..!



தன் வறுமையைக் கூற..

வார்த்தையின்றி அவன் 

கூனிக் குறுகி..

”குறுந்தகவல்” அனுப்பக் கூடும்..!



பார்த்து விட்டு..

பார்க்காதது போல 

பாவனை செய்யும்..

உறவுகள் -

முறிந்த கிளையின்

ஒடியும் சப்தம்..

வேர் வரையும் உலுக்கக் கூடும்..!



வளர்த்தவனின் சூதை..

அறுக்கும்போது மட்டுமே

அறிய நேர்ந்த

ஆட்டுக்குட்டியின்

துயரை

குரல்வளையில் இருந்து கொப்பளிக்கும்

குருதிகள் பேசக் கூடும்..!



வாயில்லா ஜீவன்களைப் போல

வறியவர்கள்...!



இருப்பவனின் செல்வத்தில்

இல்லாதவனின் இரத்தமும்

வியர்வையும்

காய்ந்து கிடப்பதை

கண்ணீர்த் துளிகள் மட்டுமே

காணக் கூடும்..!



ஆதிக்கத்தின் கொடுங்கைகள்! 

முதுமையில்



நோயின் துயரில்

மரணிக்க நேரும்

என் உடலை அச்சுறுத்துகிறாய்!      



விஷம் தோய்ந்த

உன் வாள்களால்

சல்லடையாய் துளைக்க 

காத்திருக்கும்

உன் துப்பாக்கிகளால்

சித்ரவதைகளால் 

ஒரு வீரனை

கொன்று விட முடியாது!



மண்ணில் சாயும் என் உடல்

நிலத்திற்கு 

இரத்த தானம் செய்யக்கூடும்.!



சிதைக்கப்பட்ட என் உடலில்

உன் ஆதிக்கத்தின் 

கொடுங்கைளால்

வரலாற்றைத் திரிக்கிறாய்!



நெஞ்சுக்கு நேர் நின்று

எதையும் எதிர்கொள்ளாத

உன் கோழைத்தனம்

என்னை-

மண்டியிடச் சொல்கிறது!



நிலத்திற்கு மட்டுமே 

தலைசாய்த்து

பழக்கப்பட்ட நான் 

உன்னை வணங்க மாட்டேன்!



என் நிலத்தை அபகரிக்க நீளும் 

உன் களவுக் கைகளை

வெட்டுவேன்!

ஆனாலும் நான் 

வன்முறையாளனாக மாட்டேன்!



எதிரிகளின் கைகளால்

நிகழும் மரணம்

துரோகத்தின் அழுக்கை

குருதியால் கழுவி

வரலாற்றை சுத்தப்படுத்துகிறது!



தேசபக்திப் படுகொலைகள் 


எல்லையில்

போராடி மரணித்தால்

தேசியக் கொடிப்போர்த்தி

சவ அடக்கம்..!



எல்லையின்றி

தேசியக்கொடிக்காக

பிணங்கள் தயாரிக்கப்படுகின்றன

காஷ்மீரில்..!



"நீ இந்தியனா..?

பாகிஸ்தானியா?"


"நான் காஷ்மீரி..!"    



இந்த ஒற்றைச் சொல் போதும்

உன் மரணத்தை உறுதி செய்ய..!



ஆயுதங்களுக்கு முன்னால்

அடிபணிவதே

சமகாலத்தின் தேசபக்தி..!



மண்ணை ஆள்பவர்களால் 

நிர்மாணிக்க முடிவதில்லை       

தேசம்..!



பல ஆயிரம்

காஷ்மீரிகளைப் போலவே

காணாமல் போயிருந்தது
மனிதம்..!



இராணுவத் தாக்குதலை 

எதிர்கொள்ள தெரியாமல் 

கற்களை வீசும்

இஸ்லாமியப் பெண்கள் -



சர்வதேசம் கட்டமைக்கும் 

பயங்கரவாதத்தின் 

முன்மாதிரிகள்..!








ஒரு மலர்வளையமும் சில மலர்களின் மரணமும் 



சிறைச்சாலையின் தனிமையில்

செடிகளோடு

பேசிக் கொண்டிருக்கிறேன்

என் கண்ணீர்த் துளிகளால்!



ஆயுள் தண்டனையை விடவும்

அதீத காலம் ஆனது

என் விசாரணைக் காலம்! 



கணவன்

உயிரோடிருந்தும்

விதவைகளாகினர்!

விசாரணைக் கைதிகளின் 

மனைவிகள்! 



ஒரு எளிய மனிதனின்

நம்பிக்கையைப் போல

சூரியனின் ஒளிக்கதிர்கள்

பரவிக்கொண்டிருந்த

காலைப்பொழுது

எனக்கு மட்டும் இருளானது!



கைவிலங்கிட்டு இழுத்து 

செல்லப்படுகிறேன்! 

என் செல்ல மகளின்

திருமண நாளன்று!



பூமிக்கடியில்

குழாய்க்குண்டுகளை

பதுக்கி வைத்தாயா?



தொடர்வண்டி செல்லும் 

வழிபார்த்து 

தண்டவாளத்தைத் தகர்த்தாயா?



பயங்கரவாத செயல்களுக்கு 

பயிற்சி அளித்தாயா?



உளவுத்துறையின் யூகங்களால்

தயாரிக்கப்பட்ட 

மலர்வளையத்துக்கு மத்தியில் 



உண்மைகளைப் பேச இயலாத 

ஊமை நாவுகளின்

உயிர்ப்பிணம் நான்!



காந்தி தேசமே! 

மதச்சார்பின்மை நாட்டில் 

எனக்கான மரண தண்டனையை 

நிறைவேற்றாத

உன் கருணையை என்னவென்பது?



காந்தியைக் கொன்றவனை 

தண்டித்தோம்!

அதன் காரணங்களை 

உயிரோடு உலவ விட்டோம்!



"நாம் வெளியில் இருப்பதை விடவும் 

சிறையில் இருப்பதே சிறந்தது!"

சிறுபான்மை மக்களைக் காக்கும் 

அரசுகள் சிந்திக்கின்றன!



நீதியின் புனைப்பெயரால்

அநீதியின் ஆவேசம் அடங்க 

ஆண்டுகள் பதிமூன்றுகள் ஆயின!

விடுதலையாகி

வீடு திரும்ப!



கோலிக்குண்டு விளையாடும் 

என் பேரன் கேட்கிறான்!

"வெடிகுண்டு எப்படி இருக்கும்

சொல்லுங்க தாத்தா?"



பயங்கரவாதி என 

முத்திரைக் குத்தப்பட்ட

நான் 

எப்படி சொல்வேன்? 

"பார்த்ததே இல்லை என்று" 



(சகோதரர் குணங்குடி அனிபாவின் சிறை வாழ்க்கைக் குறித்த கவிதை) 







நரபலிகள்

அப்பாவிகளின் விரல்களையும் 

ஆயுதங்களென அறிவிக்கின்றன

கற்பழிப்புக்கு பெயர் போன 

காவல் நிலையங்கள்..!



சிறைச்சாலைகளுக்காக

குற்றவாளிகளைத் தயாரிக்கின்றன

தண்டனைக்குரிய நீதிமன்றங்கள்..!



தீவிரவாதி என்பது 

செயல்களால் 

தீர்மானிக்கப் படுவதில்லை..!

சாதியைப் போலவே பிறப்பால்..!



காஷ்மீரத்தின் கர்ப்பத்தில் 

பிறந்தது போதும்..!

ஆதாரங்கள் கூட அவசியமில்லை..!



அப்சல் குரு..!



உன் குரல்வளை நெரித்த 

குருதிக்கசிவில் இருந்து

தேசியக் கொடிக்கு வர்ணம் கூட்ட 

காவிக்கூட்டங்கள் காத்திருக்கிறன..!



படுகொலையே செய்தாலும் பக்தர்கள்

பெரும்பான்மையினர்..!

குற்றம் நிரூபிக்காவிட்டாலும் 

தேசவிரோதிகள்..

சிறுபான்மையினர்..!



இனிவரும் நாட்களில் 

இப்படியும் அறிவிப்பார்கள்..!

“அடிபட்டவன் அலறுவதும் 

மனித உரிமை மீறல்”



”சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு 

செத்துப்போனால் 

அது சட்டத்தின் மனித நேயம்..!



"காந்தியடிகள் நேசித்த 

கருணைக் கொலை..!”


மலர்களின் மயானம்


துப்பாக்கி சத்தத்திற்கு மத்தியில்


மலரும் பூக்களில்..

இரத்த வாசம் அடிக்கிறது..!



வெண்கொடி ஏந்தி 

வேடர்கள் வருகிறார்கள்..!

மறைந்து கொள்கிறார்கள்

மண்ணின் மைந்தர்கள்..!



மதங்களின் ஆட்சியே 

எப்போதும் நடக்கிறது..!

மக்களாட்சி மட்டும் 

மரணித்துக் கிடக்கிறது..! 



ஜனநாயகத்தின் சவ ஊர்வலம்

நெடுநாளாய் நடக்கிறது..

தேசிய மயானம் தேடி..!



குருதிப் பாத்திகளில் 

நட்டு வைத்த ரோஜா செடியோ

வெள்ளையாய் சிரிக்கிறது..!



கனிவளத்தால் மறைக்கப்படும் 

கண்ணீர் நிலம் 

காஷ்மீரம்..!

- அமீர் அப்பாஸ் ( srathjahan.ameer@gmail.com)



காவல் தெய்வமும் கதியற்ற மக்களும்!


ஒத்தை வழிப்போற
பொண்ணு புள்ளைகள காக்கும்!
ஓங்குன அரிவாளோட 
திருட்டுப்பயம் போக்கும்!

ஊர் ஓரத்துல நிக்கும்
அய்யனார்சாமி!

எல்லோருக்கும்-
வழி விடும் விநாயகர்
வழியை மறிச்சு நிற்பார்

மாநகரின்
குறுகிய சாலைகளில்!

வரைமுறை இல்லாம
வளர்ந்த செல்வம்
முட்டுச்சந்தாக
முளைச்சு நிக்கும்!


ஆட்சியை தம்பிக்கு
விட்டுக்கொடுத்த இராம பிரான்
ஆயுதங்களோடு வருகிறார்!


வனங்களில் மட்டுமே
வசிக்கத் தகுதியான
ஆதி மனிதர்களுடன்!
இரத்த யாத்திரைக்கு
தலைமை வகிக்கிறார்
ஆட்சியைப் பிடிக்க!

கறுப்பு பணம் தின்னும்
கார்ப்பரேட் சாமிகள்!
ஆனந்தக் கூத்தாடும்
நித்யானந்த தரிசனங்கள்!

ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும்
எதிரான பெரியார்
மெல்ல மெல்ல
கள்வர்களின் கவசமாகிறார்!

கொள்கை வியாபாரத்தில்
கொலைகாரர்கள்
கருணை மிக்கவர்களாக
காட்சித் தருகிறார்கள்!



- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail)

அழைக்கவியலாப் பொழுதுகள்..!



அழைப்பு மறுக்கப்படும்
அலைபேசிக்குப் பின்னால்
ஆயிரம் கதைகள்..!


பிரியங்கள் நிறமிழந்ததன்
அடையாளமாக இருக்கலாம்..!

விருப்பங்கள் நிராசையான
துயரின் குறியீடாக இருக்கலாம்..!

வார்த்தைகளில்..
வெளிப்பட்டு விடாத
வன்மங்களின்..
எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்..!


துரோகத்தை மறக்கும்..
தருணமாக இருக்கலாம்..!
சொற்களால்..
இட்டு நிரப்ப முடியாத 
சோகத்தின் நிகழ்வாக இருக்கலாம்..!

நீங்கள் அழைக்கும் நபர் 
புணர்ச்சியின்..
உச்சத்தில் இருக்கலாம்..! 

மரணத் தருவாயில்
இருக்கலாம்..!
மரணித்தும் இருக்கலாம்..!
அலைபேசியால்..
அழைக்க முடியாத நபரை..
காலத்தின் அலைகள்
கரை சேர்க்கக் கூடும்..!

மெளனத்தின் வலி
தாங்கவியலாத.. 
அப்பொழுதுகளில் 
வார்த்தைகள் வெடிக்கக் கூடும்..!

மீண்டும்..
உரையாடல் தொடங்கலாம்..!


எல்லோரின் அந்தரங்கத்தையும் 
அறிய நேர்ந்த அலைபேசி 
தண்ணீரில்.. 
தவறி விழுவதன் மூலம் 
தற்கொலை செய்கிறது..!

உலர வைப்பதன் மூலம்
அதன் ஒத்துழையாமை இயக்கம்
சில காலம் ஒத்தி வைக்கப் படுகிறது..!

-அமீர் அப்பாஸ் ( jibran.abb@gmail.com)



 கலையும் காலச்சித்திரங்கள்..!




உதிர்ந்து கொண்டிருக்கிறது

தன் உறுதியை இழந்து...

வர்ணமடிக்கப்பட்ட

பழைய அரண்மனை...!



சிலந்திகள் கூடுகட்டி

குடும்பம் நடத்துகின்றன

மகாராணிகள் வாழ்ந்த

அந்தப்புரத்தில்....!



குழந்தைகளின் விளையாட்டிற்கு மட்டுமே

பயன்படுகிறது

அச்சு முறிந்த தேர்...!



துருவேறிக்கிடக்கின்றன

வரலாற்றின் குருதிக்கறை படிந்த

போர்க்கருவிகள்..!



மகாராஜாக்களின் சிம்மாசனத்தில்

ஓடி விளையாடுகின்றன

அணில்கள்...!



சமகாலத்தின் ஜனநாயகம் போல்

நாவை இழந்து தொங்குகின்றன

ஆராய்ச்சி மணிகள்...!



அரசியல் அதிகாரத்தின்

நிலையாமை குறித்து...

அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன

எருமை மாடுகள்...

இராஜசபை கூடிய இடத்தில்..!



- அமீர் அப்பாஸ் ( Jibran.abb@gmail.com


 வார்த்தைகளுக்கு.. 

 வசப்படாதவை..!



குழந்தைகளின் அழுகை-

அழுகை சார்ந்ததது அல்ல..!

விருப்பமின்மையின் எதிரொலி..!



குழந்தைகளின் புன்னகை-

மகிழ்ச்சி சார்ந்ததது அல்ல..!

மொழியின் தேவைகளற்றும்

புரிதல் நிகழ்ததன் 

நன்றி தெரிவித்தல்..!



சொற்களை விடவும் 

ஓசைகளும்..சைகைகளும் 

உயர்ந்த அர்த்தம் மிக்கவை.

என குழந்தைகள் நமக்கு

உணர்த்தி விடுகின்றன..! 



குழந்தைகள் பிழைப்பட

பேசும் போதெல்லாம் 

இலக்கணம் தவறி..

இலக்கியமாகின்றன..!



குழந்தைகள் ...

படைப்பின் ரகசியங்களை..

வியந்து இரசிக்கின்றன...!



தானே ஒரு வியக்கத்தக்க 

படைப்பின் அதிசயம் ..

என்பதையும்..

மறந்து இரசிக்கின்றன..! 
  
    
  
  
  
  

மேளதாள கச்சேரி  

மேளக்காரன் ஆட்சியிலே

எல்லாமே மேளம் தான்..!

வாசிக்க வரலையின்னா..

வன்முறையின் கோரம் தான்..!



தனக்கு புகழ்ப் பாட..

தானே மேடையமைச்சு..

தலைமை வகித்துடுவான்..!



நரபலிக்கு ஆளான..

நம் இனத்தை மறந்து விட்டு 

நாட்டிய நாடகத்தை..

நாளெல்லாம் இரசித்திடுவான்..!



”புறநானூற்று வீரம்..

போர் வாள் நான்” என 

பேசியவன எல்லாம்

அந்தரங்க மயிர் சிரைக்க 

அழைப்பு விடுத்திடுவான்..!



”நாட்டியக்காரி” வேணாமின்னு 

நல்லாட்சி வேணுமின்னோம்..!

ஆட்டம் பொறுக்கலியே..!

ஓட்டம் முடியலையே..!



”இழவு” விழுந்துச்சுன்னா

எப்படி இருக்குமின்னு..

ஒப்பாரிப் பாடலைக்கூட 

ஒத்திகையா கேட்டிடுவான்..!



பகுத்தறிவுக்கு பாடைக் கட்டி..

தான் மட்டும் படுக்காம..

தமிழ்த் தாயை சாக வைச்சான்..!


மொத்த இனம் செத்தாலும்..

முடிவு இதற்கு வரலையே..!





கடவுளின் இறப்புச் சான்றிதழ்

வாக்காளர்கள் -


வேட்பாளர்களின் கறுப்புப் பணத்தில் 

குறைந்த பட்சக் கூட்டாளிகள்..!



மக்களின் மனங்களை 

கொள்ளை கொண்ட 

ஆளும் கட்சி .. 

மணற்கொள்ளையிலும்

சிறந்து விளங்குகிறது..!



முதலில் மதுக்கடையை திறந்து

"குடிநோயாளி" ஆக்குவார்கள்..!

பிறகு மருத்துவக் காப்பீடு தந்து 

"வாழும் வள்ளல்" ஆவார்கள் ..!



ஏகாதிபத்தியத்தை

நக்கி பிழைக்கும் நாய்கள் 

நாடாளுகின்றன..!

அடிமைகளில் சிறந்தவர்களை

அறிவிக்கிறார்கள் "அமைச்சர்கள்" என..!



நம்மை கொலை செய்து 

நல்லாட்சி நடத்துகின்றன 

அரசுகள்..! 



தேசத்தை விற்பதே
நவீன தேசபக்தி..!

மறுப்பவனும் எதிர்ப்பவனும்

"தேசத்துரோகி"ஆவான்..!



ஒரு வேசியின் -

திறந்த யோனியைப் போல

எம்தேசம்..!

வன்புணர்ச்சி கொள்ள

வருக வருகவே

பன்னாட்டு நிறுவனங்கள்..!



கடவுள் இறந்து விட்டதை

உறுதி செய்யும்

பிரேத பரிசோதனை அறிக்கையை

ஏழை நாடுகளிடம்

விநியோகிக்கின்றன

வல்லாதிக்க நாடுகள்.
  
- அமீர் அப்பாஸ்  அமீர் அப்பாஸ் ( jibran.abb@gmail.com)

அமீர் அப்பாஸ் இவரின் படைப்புகளை கீற்று இனைய தளத்தில் கான
  

http://www.keetru.com/index.php?option=com_aisection&id=10279&Itemid=139 

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி