நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பைச் சார்ந்த டீஸ்டா செடல்வாடுடன் நேர்காணல்
டீஸ்டா செடல்வாட் தனது நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் மூலமாக குஜராத்தில் 2002 ஆம் ஆண்டின் கலவரங்களில் பாதிக்கப்பட்டோரின் நீதிக்கான போராட்டத்தில் முன்னணியில் இருந்து வருகிறார். அந்த மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதிக்கும் வேறு பல பிரச்சனைகளுக்காகவும் அவர் விரிவாகப் பணியாற்றி வருகிறார்.
சங் பரிவார், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி தனது இந்துத்துவா கொள்கை குறித்த கடும் போக்கை கைவிட்டுள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால் அதன் நிகழ்ச்சி நிரல், குறிப்பாகக் குஜராத்தில் இன்னும் மிகவும் உயிரோட்டமாகத் தானே இருக்கிறது?
சங் பரிவார் அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரல்களும் அதன் பாராளுமன்ற முகமான பாரதிய ஜனதாக் கட்சியும் அவ்வப்போது, அரசியல் அமைப்பு நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் அழுத்தங்கள் மற்றும் கண்டனங்கள் காரணமாக, ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோற்றமளிகின்றன. அவை தேர்தல் ரீதியாக தமக்கு பொருத்தமாகத் தோன்றுகிறபோதெல்லாம் தமது பிரித்தாளும் நிகழ்ச்சி நிரலை கைவிடுவது போல் தோற்றமளிக்கின்றன- உத்தரப் பிரதேசத்தில் அவர்கள் எவ்வாறு மாறியிருக்கின்றனர் என்பதைக் காண்க ஆனால் அவை உண்மையில், தேர்தல் லாபங்களை அறுவடை செய்து கொடுத்த பாதையை இப்போது வரையிலும் கைவிடவில்லை.
பெரும்பான்மை வாதம் அல்லது பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவது (1984 சீக்கியர் படுகொலைக்குப் பிறகு காங்கிரசு கூட இதைச் செய்தது) நடந்தது. இப்போது குஜராத்திலோ அல்லது வேறு எங்கிலுமோ அவை இந்த அடிப்படைப் பிரித்தாளும் முறையைச் செய்து வருகிறார்கள், இது தான் உண்மை நிலையாக இருக்கிறது. “இந்து கோபம்”, “இந்து சீற்றம்”, “இந்துத் தண்டனை” ஆகியவற்றை எல்லா நேரத்திலும் பேசிக்கொண்டிருக்க முடியாது. அது சலிப்படையச் செய்யும், வேறு எதுவும் இல்லையென்றால், பிறகு வேறு என்ன தான் செய்வது?
சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, ஜனநாயக நிர்வாகத்தின் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவி பெரும் தேர்தல் ஆதாயத்தை பெற்றுக்கொண்டு, காவலர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகளையும் கூட உங்கள் அரசியல் அமைப்பு விரோத உலகக் கண்ணோட்டத்திற்கு ஆட்பட வைத்துக்கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைத்து மக்களுக்குமான சம உரிமைகள் என்பவை அனைத்து இந்தியர்களுக்குமான கேள்விக்கிடமற்ற பிறப்புரிமை என்பதை நம்புவதில்லை.
அவர்களுடைய நிகழ்ச்சிநிரலை இவ்விதமாக சூழ்ச்சிகரமாக மேற்கொண்டு வருவது குறித்து குஜராத்தில் விரிவாக வேலை செய்துவருகிற ஒருவராக உங்கள் கருத்து என்ன? அவரை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த கடும்போக்கான காவி அரசியலிடமிருந்து மோடி ஏன் தன்னை தொலைவில் நிறுத்திக் கொள்கிறார்?
குஜராத் ஒரு சிறப்பு ஆய்வுக் களம் ஆகும். அந்தப் பகுதிக்கு ஒரு செழுமையான பன்மைவாதக் கடந்த காலம் இருக்கிறது. அது 1960களின் மத்தியிலிருந்து முரண்பாடற்ற வகையில் செயல்பட்டு வருகிறது. குஜராத்தைப் பற்றி நாம் பேசும்போது கவிஞர் நர்மதுவின் உள்ளடங்கிய மற்றும் தொலைநோக்குப் படைப்புக்கள் நினைவுக்கு வருகின்றன. மேலும் உருதுக் கவிஞரான வாலி குஜராத்தி, அலைந்து திரிந்து கடைசியில் குஜராத்தைத் தான் தனது தங்குமிடமாகக் கொண்டார். அகமதாபாத்தில் 2002ல் மூன்று மாதங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த கொள்ளைக் கும்பலால் திருட்டுத்தனமாக அவரது தர்க்கா பிப்ரவரி 28 அன்று இரவு இடித்துத் தள்ளப்பட்டது. (அது காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே வின் அலுவலகத்திற்கு மிக அருகில் இருந்தது.) இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புக்களின் வெற்றியை எடுத்துக் காட்டுகிறது.
இன்று மோடி புதிய தோற்றத்தை வெளிப்படுத்த செய்யும் முயற்சி மேலோட்டமானது தான்- இசுலாமிய இளைஞர்களுக்கான பிரதமர் உதவித்தொகை ரூ.10,000 கோடி எவ்விதம் திருப்பி அனுப்பப்பட்டது என்பதிலிருந்து நீங்கள் இதை அறிந்து கொள்ளலாம். குற்றச் செயல்களைக் கையாள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள மாநில் அரசு வழக்குரைஞர்களில் எத்தனை பேர் முஸ்லிம்கள்? குஜராத்தில் 4000 வழக்கறிஞர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர். அரசு வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் ஆகியோர் நியமனங்களில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா?
பல நகரங்களில் சிறுபான்மையினரைப் பிரித்து வைப்பது மோசமாக உள்ளது- 2002க்கு முன்பே கூட அது இருந்துள்ளது, இப்போது அது மிகமோசமாக வளர்ந்துள்ளது, அவ்வளவு தான்- மேலும் சில பள்ளிகளில் முஸ்லிம் மற்றும் கிறித்தவ மாணவர்களுக்கு அனுமதியே கிடைப்பதில்லை. பிரிவினைப் பாதை அனைவரையும் பாதிக்கிறது என்ற எண்ணம் இப்போது பல குஜராத்தியர்களிடம் இருக்கிறது.
அகமதாபாத், வடோதரா அல்லது சூரத்தில் அபூர்வமாகப் பேசப்படும் ஒன்று- ஊடகம் கூட வழக்கமான கதையைப் பிரசுரிப்பதை விட அமைதியாக இருந்து விடுகிறது- இந்த நகரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நிகழ்வதாகும். கீதங்களின் இசை இரவுக் காற்றில் வெளியே கசிந்து செல்லாத வண்ணம் தேவாலயங்களின் கதவுகள் மூடிவைக்கப்பட வேண்டியிருந்தன.
விளிம்பு நிலை மக்களிடம் பணியாற்றிவரும் கிறித்தவ அறக்கட்டளைகளை குறிவைத்துத் தாக்குவதும் ஆவணப்படுத்தப்படுவதில்லை. அன்றாட துன்புறுத்தலும் பணம்பறிப்பதும் நடந்து வருகின்றன. ஊடகம் பற்றிய மிகச் சோகமான உண்மை என்னவென்றால் இந்த அன்றாட வக்கிரம் சகித்துக் கொள்ளப்படவேண்டியதாக ஆகிவிட்டது தான்.
கலவரப் பகுதிகள்( குஜராத் அசையாச் சொத்துக்களை மாற்றுவதற்கான தடை மற்றும் வளாகங்களிலிருந்து வாடகைதாரர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுத்துப் பாதுகாக்கும் விதிமுறைகள்) சட்டம், தோற்றத்தில் பிரிவினையைத் தடுப்பதாக இருந்தாலும் நடைமுறையில் அது பிரிவினையை ஊக்குவிக்கிறது. இது பற்றி சிறிது கூற முடியுமா? கலவரங்களுக்குப் பிறகு துன்பத்தினால் விற்றுவிட்டு செல்வதைத் தடுக்கும் வகையில் அது திருத்தப்பட்டதாக கூறப்பட்டதே.
இது ஒரு விந்தையான சட்ட உருவாக்கம் ஆகும், அது உண்மையில் தலித் பாதாக்கள், முஸ்லிம் பஸ்திக்கள் மற்றும் பிறரின் இறுக்கமான வகுப்புவாதப் பிரிவினைகளை அடிப்படையில் பாதுகாப்பதாகும். இவர்களுக்கிடையில் சிறு எண்ணிக்கையில் கிறித்தவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சட்டம் உண்மையில் துன்பச் சூழலில் விற்பதைத் தவிர்ப்பது என்ற பெயரில் வகுப்புக்களுக்கிடையிலான விற்பனையைத் தீவிரமாகத் தடுப்பதைப் பாதுகாத்துள்ளது.
மோடி அரசாங்கம் சிறுபான்மையினரை, குறிப்பாக கிறித்தவர்களை குறிவைத்து மதமாற்றச் சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதா?
ஆம், “மத சுதந்திர சட்டம்” என்று முரண் நகையாக அழைக்கப்படும் ஒரு சட்டத்தை குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்கள் கொண்டுவந்துள்ளன. அச்சட்டம் உண்மையில் ஒவ்வொரு இந்தியனுக்கும் தனது சொந்த நம்பிக்கையை போதிப்பதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் அரசியல் சட்டப் பிரிவு 25ன் கீழ் உள்ள உரிமையைத் தடை செய்கிறது. இச்சட்டங்கள் உள்ளார்ந்த வகையில் அரசியல் சட்டத்திற்கு எதிரானவை என்று நான் நம்புகிறேன்.
குஜராத்தில் வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றி உங்கள் கருத்து.
மிகவும் சரி. பின்வரும் புள்ளி விவரங்களைப் பாருங்கள். குஜராத்தில் உள்ள முஸ்லிம்களில் 26 விழுக்காட்டினர் மட்டுமே பத்தாம் வகுப்பு வரை எட்டிப் பிடிக்கின்றனர். இதில் ஒட்டு மொத்த விழுக்காடு 46 ஆகும். பள்ளிகளில் சேர்க்கப்படும் ஒட்டுமொத்த மாணவர் விழுக்காடு 79 ஆக இருக்கும்போது இதில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 75 விழுக்காடு மட்டுமே. குஜராத்தில் முஸ்லிம்களில் நகர்ப்புற வறுமையில் இருப்போர் உயர்சாதி இந்துக்களின் எண்ணிக்கையை விட 800 மடங்கும் பிற பிற்பட்ட சாதியினரின் எண்ணிக்கையை விட 50 மடங்கும் மிகுதியாக உள்ளன. அந்த மாநிலத்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் 12 விழுக்காடு மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியவை, அதிலும் 2.6 விழுக்காட்டினருக்கு மட்டுமே கடன் கிடைக்கிறது.
மிகவும் சரி. பின்வரும் புள்ளி விவரங்களைப் பாருங்கள். குஜராத்தில் உள்ள முஸ்லிம்களில் 26 விழுக்காட்டினர் மட்டுமே பத்தாம் வகுப்பு வரை எட்டிப் பிடிக்கின்றனர். இதில் ஒட்டு மொத்த விழுக்காடு 46 ஆகும். பள்ளிகளில் சேர்க்கப்படும் ஒட்டுமொத்த மாணவர் விழுக்காடு 79 ஆக இருக்கும்போது இதில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 75 விழுக்காடு மட்டுமே. குஜராத்தில் முஸ்லிம்களில் நகர்ப்புற வறுமையில் இருப்போர் உயர்சாதி இந்துக்களின் எண்ணிக்கையை விட 800 மடங்கும் பிற பிற்பட்ட சாதியினரின் எண்ணிக்கையை விட 50 மடங்கும் மிகுதியாக உள்ளன. அந்த மாநிலத்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் 12 விழுக்காடு மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியவை, அதிலும் 2.6 விழுக்காட்டினருக்கு மட்டுமே கடன் கிடைக்கிறது.
எல்லாவற்றையும் விட குஜராத்தில் மோசமான பட்டினியும் சத்துப் பற்றாக்குறையும் மிகுந்திருக்கிறது. குஜராத்தில் 1999ல் பெண்களிடையேயும் குழந்தைகளிடையேயும் 46.3 விழுக்காடாக இருந்த ரத்த சோகை நோய் 2004ல் 55 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது- இது தான் அதிரும் குஜராத்தில் நடப்பதாகும். 1974க்கும் 2008க்கும் இடையில் குஜராத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு (GDP) தேசிய அளவில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடப்படும் போது மாறவே இல்லை.
மைய அரசின், அரசியல் சட்ட ரீதியான அமைப்புக்களின், செயலற்ற தன்மை தான் துயரமளிப்பதாக இருக்கிறது. 2002லிருந்து மீட்பு, மறுவாழ்வு போன்றவற்றில் செயல்படாக் குற்றத்தை இழைத்திருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதன் ஆண்டறிக்கைகளில் குறிப்பிட்டுள்ள போதிலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் கூட முஸ்லிம் இளைஞர்களுக்கான கல்வி உதவித் தொகை நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த பிரச்சனையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேசியப் பெண்கள் ஆணையம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஆகியவை குஜராத் பெண்கள், குழந்தைகளிடையே பட்டினியும் ரத்த சோகை நோயும் அதிகரித்து வருவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏன்?
சச்சார் குழு அறிக்கை முன்வைத்துள்ளது போல சம வாய்ப்புக்களுக்கான ஆணையம் ஓன்று இருக்குமானால், அது ஊக்குவிப்பும் சுதந்திரமும் கொண்டதாக இருக்குமானால், பாகுபாட்டைச் சுட்டிக்காட்டும் இந்தப் பிரச்சனைகள் சரிசெய்யபடலாம்.
இந்த விளிம்புநிலை சமூகத்திற்கு என்னதான் வழி?
ஒவ்வொரு வழியிலும் இந்தப் பாகுபாட்டிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதும் நீதிமன்றங்களில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றிடம் மனுக்கள் தாக்கல் செய்து, இந்த புறகணிப்பு குறித்து அங்கீகரிக்கச் செய்து தீர்வு காண்பதும் தான் ஒரே வழி. சமுதாய அமைப்புக்கள் உதவி வழங்குவது மிகவும் நல்லது தான், ஆனால் இந்திய அரசும் குஜராத் அரசும் என்ன செய்யப் போகின்றன?
தலித்துக்களானாலும் கிறித்தவர்கள் ஆனாலும் முஸ்லிம்கள் ஆனாலும் அனைத்துக் குடிமக்களுக்கும் அரசியல் சாசனக் கடமையும் பொறுப்பும் அவற்றுக்கு இல்லையா? வீட்டுக் கடன்கள், வங்கிக் கடன்கள்.. இன்ன பிறவற்றில் பாகுபாடு காட்டும் துறைகள் எவை என்பதை நாம் கூட்டாகச் சேர்ந்து கண்டறிய வேண்டும்... பள்ளிகளில் சேர்க்கை, உயர் கல்வியில் சேர்க்கை ஆகியவற்றில் இதை வெளிக் கொண்டுவருவதில் ஊடகங்கள் ஒரு பங்கினை வகிக்க வேண்டியிருக்கிறது.
பொது உணர்வில் தீங்கு விளைவிக்கும் “நாம்”, “அவர்கள்” என்ற பிளவுபடுத்துதல், அரசியல் எதிர்ப்பில் கூட தற்காப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உணமையான பிரச்சனையாகும். அரசியல் வர்க்கம் செயல் வீரத்திற்கு ஆதரவான, ஏழைகளுக்கு ஆதரவான, விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவான கிளர்ச்சிகள் மூலம், சிறுமிகள், பெண்கள், தலித்துக்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு அடிப்படை வசதிகளான வீட்டு வசதி மற்றும் கல்வி உரிமைகள் மறுக்கப்படுவது குறித்த பிரச்சனைகளை முன்னெடுக்க வேண்டும்.
அரசியல் எதிர்ப்பு என்று நான் குறிப்பிடுகையில், நான் காங்கிரசைக் குறிப்பிடுகிறேன். ஆனால் பிற தேசிய மதச் சார்பற்ற கட்சிகளின் பங்கு என்ன? அவர்களும் கூட இங்கு பிரச்சாரத்தை மேற்கொண்டு, கிளர்ச்சிகளைக் கட்டமைத்து, பொதுமக்களின் கருத்தை உருவாக்கி அதிகரிக்கச் செய்து உதவலாம். அனைத்திந்திய ஜனநாயக மாதர் பேரவை, இ.பொ.க., இ.பொ.க.(மா) போன்றவை கிளர்ச்சிகள் செய்த காலம் ஒன்று இருந்தது, ஆனல இப்போது அவை இருக்கும் இடம் தெரியவில்லை.
அமைதி மற்றும் ஒற்றுமைக்கான சத்பவன இயக்கம் குறித்து உங்கள் கருத்து.
அது அந்தச் சொல்லுக்கான அவமரியாதை ஆகும். வரி செலுத்துவோரின் உழைப்பால் வந்த பணத்தை வீணடிப்பதாகும். மோடியை மட்டுமல்லாது, (2002ல் கட்சிக்குள் மோடியின் அரசியல் வாழ்வை மீட்டுத் தந்த) (அருண்) ஜெட்லிக்கள் மற்றும் பா.ஜ.க.வின் பிற தேசியத் தலைவர்களைக் கேளுங்கள், அவர்கள் கோத்ராவுக்குப் பிந்தைய அடக்குமுறைக் கொலைகளின் நிகழ்ச்சிப் போக்கை சந்தேகத்துக்கிடமற்ற வகையில் கண்டிக்கிறார்களா? நம்மில் ஒவ்வொருவரும், மதச்சார்பற்ற குழுக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள் அனைவருமே கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வைக் கண்டித்தோம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க./ விஸ்வ ஹிந்து பரிசத் ஆகியவை கோத்ராவுக்குப் பழிவாங்கும் வகையில் பெருந்திரள் பச்சைப் படுகொலைகளையும் பட்டப்பகல் பாலியல் வன்முறைகளையும் கண்டிப்பதில் ஏன் தயக்கம் காட்டுகின்றன? ஏனென்றால் படுகொலை மற்றும் வெறுப்பு ஆகியவற்றைச் சார்ந்திருப்பதன் லாபங்களை அரசியல் ரீதியாக எங்கோ தாம் அறுவடை செய்துள்ளதை அவர்கள் அறிவார்கள்.
- அனுபமா கடகம்.
தமிழில்: வெண்மணி அரிநரன்
நன்றி : கீற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக