வரதட்சணை வாங்குவதால் ஏற்படும் தீமைகளில் மிக மோசமான தீமை, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்களுக்குப் போய் சேர விடாமல் தடுப்பதாகும்.
நாங்கள் எங்கே தடுக்கின்றோம் என்று வரதட்சணை வாங்குபவர்கள் கேட்கலாம். அதற்கான விளக்கம் இதோ!
பொதுவாக சொத்துக்கள் பங்கு வைக்கப்படுவது, சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு தான்! ஆனால் வரதட்சணைக் கொடுமை இங்கும் அநியாயமாகப் பாய்கின்றது.
மாப்பிள்ளைகள், பெண்ணைப் பெற்ற தகப்பனிடம் நகை, தொகை, நஞ்சை, புஞ்சை என்று கோருகின்றனர். தகப்பனார் தனது மகளுக்காக தான் உயிருடன் இருக்கும் காலத்தில் மேற்கண்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்து திருமணம் முடித்து வைக்கின்றார். தகப்பனார் இறந்ததும், அவரது சொத்துக்கள் பாகப்பிரிவினை சட்டப்படி அந்தப் பெண்ணுக்கும் சொத்துக்களின் உரிய பங்கு போய் சேர வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு சேர்கின்றதா என்றால் இல்லை!
பெண்ணின் சகோதரர்கள் அவளை அழைத்து, "உன்னைக் கட்டிக் கொடுக்கும் போது இவ்வளவு தொகை பணமாகவும், பொருளாகவும் தந்திருக்கின்றார். அதன் மதிப்பு இவ்வளவு ரூபாய் ஆகின்றது.
எனவே இப்போது சொத்தில் உனக்குரிய பங்கை எங்களுக்காக விட்டுக் கொடு" என்று அன்பாகவோ, அதட்டலாகவோ பேசி அப்பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தை அநியாயமாக அபகரித்து விடுகின்றார்கள்.
ஒரு சில ஊர்களில் பெண்கள் சொத்தில் பங்கு கேட்பதே பாவம் என்று பெண்களே நினைக்கின்றார்கள்.
இந்தக் கொடுமை தமிழக முஸ்லிம்களிடத்தில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தகப்பன் இறந்த பிறகு பங்கு வைக்கப்பட வேண்டிய சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் போது வழங்கிய அன்பளிப்பை எப்படிக் கழிக்க முடியும்? இதைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணின் சொத்துரிமையை எப்படி மறுக்க முடியும்? பாகப்பிரிவினையைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் சொல்லி விட்டுக் கூறுவதைக் கவனியுங்கள்!
இவை அல்லாஹ்வின் வரம்புகள்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:13,14)
அல்லாஹ்வின் இந்த வரம்புகளை மீறினால் இப்படி மீறுபவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றான்.
வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடம் சொல்லும் போது, மற்ற மற்ற மக்களை விட்டு விடுவோம். ஏகத்துவவாதிகளே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஏகத்துவவாதிகள் எல்லோரையும் இப்படிச் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சொந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தைப் புறக்கணித்து பட்டினி கிடப்பவர்களும் இருக்கின்றார்கள்.
இன்னும் சொல்லப் போனால் இந்தத் தீமைகளையெல்லாம் கருத்தில் கொண்டு வரதட்சணை மட்டுமல்ல, பெண் வீட்டில் தாங்களே விரும்பித் தரும் அன்பளிப்பைக் கூட வாங்க மாட்டேன்; பொட்டு நகை கூட போடாமல் வந்தால் தான் திருமணம் முடிப்பேன் என்று சபதம் செய்த ஏகத்துவவாதிகளும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.
ஆனால் அதே சமயம், இதையெல்லாம் பெரிய தீமையாக நினைக்காமல் வரதட்சணை வாங்கப் படும் திருமணங்களில் போய் கலந்து கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் ஏகத்துவவாதிகள் என்ற பெயரில் இருக்கத் தான் செய்கின்றார்கள்.
வரதட்சணை வாங்குவது பெண்களின் சொத்துக்களைப் பறிக்கும் அளவுக்குக் கொண்டு செல்கின்றது. சொத்துக்களைப் பறிப்பது அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதாகும். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவது நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்கின்றது. இப்படி நிரந்தர நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த வரதட்சணையை வாங்கலாமா? அவ்வாறு வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் போய் கலந்து கொள்ளலாமா? முடிவெடுங்கள்!
இது போன்ற திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரதட்சணை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணியுங்கள்!
source: tntj.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக