படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

1 நவ., 2011

அத்வானியின் ரத யாத்திரை: மோடி வித்தைக்கு எதிரான மோசடி வித்தை



பாரதிய ஜனதாவின் உட்கட்சிப் பூசல், வெடித்து வெளிவந்து விட்டது. கட்டுப்பாடான கட்சி, உறுதிமிக்க இயக்கம் என்பன போன்ற ஒப்பனைகள் கலைந்துவிட்டன. இந்துத்துவத்தின் வெளிப்படையான வெறியைக் கொண்டு, அதிகாரத்தில் இருக்கும் மோடி தொண்டர்களின் முன்மாதிரியாகி விட்டார்.

இதைப் பொறுக்க இயலாத நிதிஷ்குமார், அத்வானி போன்றோர் நிம்மதி இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடாக ரத யாத்திரையை மீண்டும் அறிவிக்க வேண்டிய அவசர நிலை, உட்கட்சிப் பூசலால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஊழலை எதிர்த்து, கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவரவேண்டிய லட்சிய வேட்கை இப்படித்தான் துவங்கியது.
முன்பெல்லாம் பல்வேறு கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இந்துத்துவத்தைப் போற்றி வளர்த்தார்கள். உதாரணமாக, ‘பிள்ளையார் பால் குடிக்கிறார்’ என்று கிளப்பிவிடுவார்கள். அவரை, ‘நான்தான் குடிக்க வைத்தேன்’ என சந்திராசாமிகள் ஆனந்தக் கூத்தாடுவார்கள்.
இது ஊடகங்களின் காலம். உண்மை, தெருவுக்கு வர ஒரு சில விநாடிகள் போதும். ஒரே ஒரு காட்சிப்பதிவில், நித்தியானந்தாக்களின் ஆன்மீக வாழ்வு முடிவுக்கு வந்துவிடுகிறது. இதைப் புரிந்துகொண்ட இந்து மேலாதிக்கவாதிகள், ஊடகங்களின் வழியாக அன்னா ஹசாரேக்களை உற்பத்தி செய்கிறார்கள்.
சென்னையில் கே.கே. நகரில், சினிமா படப்பிடிப்புக்காக, கலை இயக்குநர்களால் வடிவமைக்கப்பட்ட சிவன் சிலையைப் படப்பிடிப்பு முடிந்த பின்னால் அப்புறப்படுத்தாமலே போனதனால், மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்கா, சிவன் பூங்கா ஆனது.
இதை அகற்றக் கோரி, பல போராட்டங்கள் நடத்தியும், முடிவு எட்டப்படாமல் போகவே, பெரியார் திராவிடர் கழகம் அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டது. மதச்சார்பின்மை தேசம் என்றபோதும் பொது இடங்களில் கோயில்கள் அமைப்பதை, ஆக்ரமிப்பதை யாரும் அகற்றிவிட முடியாது.
அதைப் போலவே அசலை நகல்கள் ஜெயித்துவிடும் அரசியல் உலகில், அன்னா ஹசாரேக்கள் அத்வானியின் அரசியல் வாழ்வை, சூனியமாக்கிவிடும் வாய்ப்பு அதிகம். ஆகவே, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அத்வானிக்கு நேர்ந்துவிட்டது. அதனால், அவரும் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுவிட்டார்.  
தமிழ்நாட்டில் கூட ஒரு முக்கியமான திராவிடக் கட்சித் தலைவர் ஒருவர், தனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டதற்காக, மருத்துவர் நடைப்பயிற்சி மேற்கொள்ள சொன்னார். அவரும் அரசியல் காரணங்கள்,சிலவற்றைக் கூறி உடனே கோட்டையை நோக்கி நடைப்பயணம் சென்ற கடந்த கால வரலாறு இங்கும் உண்டு. பின்னாளில் அதே ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்து அவமானப்பட்டார்.

மண்டல் கமிஷன் பரிந்துரையைக் கிடப்பில் போட, ஏற்கனவே 1990களில் ரத யாத்திரை நடத்திய அத்வானியின் பெருமுயற்சியால், 564 முஸ்லிம்கள், பல்வேறு திட்டமிடல்களால், கலவரங்களின் வன்கொடுமைகளால் கொலை செய்யப்பட்டார்கள்.
இதன் எல்லையை விரிவுபடுத்தி, தன் சொந்த மாநிலத்தில் சோதனைக்களமாக 10,000க்கும் மேற்பட்டவர்களைப் படுகொலை செய்த துணிச்சல் மோடிக்கு வாய்த்திருக்கிறது. அரசின் அறிக்கைகளின்படியே 3500 என கணக்கிடப்படுகிறது.
தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களை, இனப்படுகொலை செய்த அரச பயங்கரவாதத்தில், இராஜபக்சேவுக்கு முன்னோடியாக மோடி திகழ்கிறார். இராஜபக்சேயைக் கண்டிக்கிற பலர், மோடியின் ஆதரவாளர்களாக இருக்கும் அரசியல் விநோதம் இங்கே கண்முன் நிகழ்கிறது.
‘நாம் தமிழர் கட்சித்’ தலைவரான இயக்குநர் சீமான் மோடியின் புகழ்பாடி வாக்கு கேட்கும் அளவுக்கு, இழிவான அரசியலை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் கூட்டங்களில் நிகழ்த்திக் காட்டினார்.
அவரால் மட்டுமே ஒரே நேரத்தில் பெரியாரின் பேரன் என்றும், இந்துத்துவத்தோடு கைகுலுக்கிக் கொண்டு ஈழம் பற்றியும் பேச முடிகிறது. ஊழல் பற்றிப் பேசுகிற அருகதை பாரதிய ஜனதாவுக்கு உண்டா? எனில்,அவர்களின் வரலாறு, நமக்குத் தொடர்ந்து அருவருப்பு ஊட்டுவதாக அமைந்திருக்கும்.
கார்கில் போரில் மரணம் அடைந்தவர்களின் சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் செய்கிற அளவுக்கு தேசபக்தி மிக்கவர்கள் அவர்கள். இந்தியாவின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக இவர்கள் பேசியது உண்டா? இல்லை. ஏனெனில் அதன் பங்குதாரர்களாக இருப்பவர்கள் என்பதால் பேச இயலவில்லை.
பாரதிய ஜனதா ஆளுகின்ற கர்நாடக மாநிலத்தில், சுரங்க முறைகேடு ஊழலால் நாடு சிரிக்கிறது. ஆகவே,பெல்லாரி மாவட்டத்தில் இருந்துதான், அத்வானி ஊழலுக்கு எதிரான ரத யாத்திரையைத் துவங்கி இருக்க வேண்டும்.
60,000 கோடி மதிப்புடைய 71 லட்சம் டன் இரும்புத்தாது கனிமங்களைக் கொள்ளையடித்த ரெட்டி சகோதரர்கள், ஒரு பங்கினை எடியூரப்பாவுக்கும், மற்றொரு பங்கினை டில்லியில் உள்ள பா.ஜ.க.தலைவர்களுக்கும் தந்துள்ளனர். இதை விசாரித்த லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தெளிவாகத் தெரிவிக்கிறது. பலரும் இதற்கு எதிராக எழுப்பிய குரல்களுக்கு, அத்வானி வகையறாக்களின் பதில் என்ன?
அலைக்கற்றை ஊழலில் கடந்த காலங்களில், பாரதிய ஜனதா கட்சி கடைப்பிடித்த கொள்கைகளைத் தான் அப்படியே பின்பற்றியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வாக்குமூலம் மற்றும் பிரதமர் அளித்த அறிக்கைகளில் கூறியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வாஜ்பாய் காலத்தில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி நடைமுறைப்படுத்திய இரண்டாம் அலைக்கற்றை மைக்ரேசனில் ரூ.43,000 கோடி, அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர் பி.சி.சாக்கோ அறிக்கை தாக்கல் செய்துள்ளார். வகுப்பு வெறியைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளத் துடிப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு வேசியின் வீட்டைப்போல் தேசத்தைத் திறந்து வைத்து, நாட்டை விற்பவர்களும் அடிப்படையில் தேசத்துரோகிகள் மட்டுமல்ல, மனித குல விரோதிகள்.
அருந்ததி ராய் சொன்னதைத்தான் திரும்பச் சொல்ல வேண்டி உள்ளது. ‘காங்கிரஸ், இரவில் மறைந்து கொண்டு செய்வதை, பாரதிய ஜனதா பகலில் செய்கிறது.’ இவர்கள் அல்லாத ஒரு அரசியல் சூழல் நாட்டிற்கு அமையாதவரை, எரியும் வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்கிற பிழைப்புவாதமே நம் தேசிய குணமாகத் திகழ்வதை மாற்ற முடியாது.
சுரண்டல் அற்ற சமூகத்திற்கு எதிராகச் செயல்படத் திராணியற்ற, கனவுகாணும் வல்லாதிக்கத்தின்குழந்தைகள் நாம்! அடிமைத்தனத்தின் பெருமைக்குரிய பிரதிநிதிகளாகிய நமக்குப் பாடம் கற்பிக்க, காலம்விரைந்து காத்திருக்கிறது.

அமீர் அப்பாஸ்
thanks to Uyirmmai.com

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி