டில்லியில் எழுத்தாளர் அருந்ததிராய் வீட்டின் மீது பாரதீய ஜனதா கட்சியின் பெண்கள் அணியினர் (மகிளா மோர்ச்சா) நடத்திய தாக்குதலும், அங்கு அவர்கள் எழுப்பிய வசை கோஷங்களும் இந்தியாவில் சமய வெறியும், சமய சகிப்பின்மையும் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. இவ்வன்செயல்கள் இத்தகைய அரசியல் இன்னும் தரம் தாழ்ந்து விட்ட தற்கான எடுத்துக்காட்டு. இந்திய அரசியல் சட்டத்தின் மையமாக இருப்பது பேச்சுரிமையும் கருத்து உரிமையும். இவ்விரண்டையும் உண்மையாக மதிக்கும் மக்களாட்சிக் கோட்பாட்டிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டோமென்பதை இச்செயல்கள் உணர்த்துகின்றன.
காஷ்மீர் பற்றி எழுத்தாளர் அருந்ததிராய் கூறிய கருத்துக்களுக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு என்று மோர்ச்சாவின் இந்த மக்களாட்சி விரோத செயல்கள் நியாயப்படுத்தப்பட்டது அருவருப் பானது. முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தையொட்டி இச்செயல்கள் நடந்திருப்பது முக்கியமானது. காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் பி.ஜே.பியின் தாயாகிய ராஷ்ட்ரிய சுவயம் சேவக்கை தடை செய்தவர் வல்லபாய் பட்டேல். “இந்திய அரசினைத் தங்களுடைய தேவை களுக்கு நிர்ப்பந்திக்க இந்துத்வா ஆதரவாளர்கள் செய்யும் முயற்சிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றும் எச்சரித்தவர் பட்டேல்.
அருந்ததிராய் வீடு தாக்கப்பட்டதில் தெளிவான தொரு சதித்திட்டம் இருக்கிறது. முதலில், டெல்லி பொதுக்கூட்டமொன்றில் காஷ்மீர்பற்றி அவர் கூறிய கருத்துக்கள் சிதைக்கப்பட்டு, இந்தியா உடைக்கப்படுவதை ராய் ஆதரிப்பதாகப் பரப்பப் பட்டது. ஆனால் அவர், “அக்டோபர் 1947இல் மகாராஜா காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டாலும் ஜம்மு - காஷ்மீர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதவொன்று” என்றுதான் பேசியிருந்தார். அருந்ததிராய் பேசியது ஒரு உண்மை - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா முதற்கொண்டு ஆயிரக்கணக்கான காஷ்மீர் மக்கள் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
1972இல் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தமும், திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அரசு உட்பட, பல்வேறு இந்திய அரசுகள் காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் ஒரு ஒத்த கருத்தை எட்டச் செய்த, செய்யும் முயற்சிகளும் காஷ்மீர் சிக்கல் தொடர்ந்து இருப்பதற்கான ஆதாரங்கள். காஷ்மீரை ராணுவம் ஆக்கிரமித்து அங்கு நடத்திவரும் கொடுமைகளைப் பற்றியும் ராய் பேசினார். ராணுவத்தின் அத்துமீறல்களையும் நாம் மறுக்க முடியாது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4,00,000க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் போலீஸ் வீரர்கள் உள்ளனர்; கடந்த இருபது ஆண்டுகளில் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இரண்டாவது, பிரிவினையாளர் சையத் அலி ஷா கிலானியுடன் அருந்ததிராயை ஒப்பிட்டு இ.பி. கோ. 124 (அ) பிரிவின் கீழ் தேச விரோத செயலுக்காக ராய் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று பி.ஜே.பி. வற்புறுத்துகிறது. இப்படி பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வை வளர்க்கிறது. உண்மையில் அருந்ததி ராயின் பேச்சு காஷ்மீர் குறித்த ஒரு ‘நிதானமான சிந்தனைதான்’. ஆனால் அரசின் மீது ‘அதிருப்தி’ ஏற்படுத்துவதற்காகவும் ‘வெறுப்பு’ உண்டாக்கு வதற்காகவும் அருந்ததிராய் பேசப்பட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இப்பொய்யினை ஆராய்வதாக மைய அரசு கூறுவது அவதூறு அரசியலை நியாயப்படுத்துவதற்குச் சமம். விவாதத் துக்குரிய, சர்ச்சைக்குரிய, மக்களாட்சிக் கோட் பாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களுக்கும், வன்முறையைத் தூண்டக்கூடிய கருத்துக்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் காணத் தவறு கின்றனர். ராயின் பேச்சு வன்முறையைத் தூண்டக் கூடியது அல்ல. மாறாக அவர் சொல்வது போல, “நீதிக்கான ஓர் அடிப்படை அழைப்பு”.
மூன்றாவது, அருந்ததிராய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்ற தவறான எண்ணத்தை மைய அரசு ‘கருணையுடன்’ கைவிட்டதைக் கண்டு ஊடகங்கள் சில கோபம் கொள்கின்றன. ‘ஏமாற்றுக்காரர்’, ‘தேசத்துரோகி’ என்றெல்லாம் ராயை முத்திரையிடுகின்றன (சில ஊடகங்கள் இவற்றைவிட மோசமான அடைமொழிகளை வீசுகின்றன). ‘டைம்ஸ் நவ்’, ‘நியூஸ் 24’, ஏன் ‘என்டிடிவி’ கூட ராயின் வீடு மீதான தாக்கு தலுக்கு ஒத்துழைக்கின்றது. பி.ஜே.பி.யின் மகிளா மோர்ச்சா ராயின் வீட்டையடையும் முன்பே, அங்கு தங்களுடைய வெளிப்புற ஒளிபரப்பு வாகனங்களை அனுப்புகின்றன. தொலைக்காட்சி பார்ப்பவர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள் வதற்காகப் பேச்சுரிமையையும், சட்டத்தின் ஆட்சியையும் மிதித்தெறிவதற்கு இவை துணை போகின்றன.
மக்கள் சுதந்திரத்தின் மீதும், இந்திய ஜன நாயகத்தின் மீதும் இந்துத்வா வலதுசாரிகள் இரு முனைத் தாக்குதலைத் தொடுத்த நேரத்தில்தான் அருந்ததிராயின் வீடும் தாக்கப்பட்டது. முதலாவது பல்வேறு காரணங்களுக்காக சங்க் பரிவாருக்குப் பிடிக்காத புத்தகங்கள், நாடகங்கள், திரைப் படங்கள் ஆகியவற்றுக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. ‘பெரும்பான்மை சமூகத்தின்’ உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி, அவற்றைத் தடை செய்ய சங்க் பரிவார் விரும்புகிறது (ஆனால் ‘பெரும்பான்மை சமூகத்தை’ இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை).
சங்க் பரிவாரின் விருப்பங்களுக்காக ரோஹின் தான் மிஸ்திரியின் அருமையான நாவல் ஒன்று பம்பாய் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியப் பட்டப் படிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. கலைச் சுதந்திரம் மீதும், அறிவார்ந்த படைப்புகள் மீதும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது புதிதல்ல. இத்தாக்குதல்களுக்கு ஒரு வரலாறு உள்ளது. டெல்லியில் சகமத்தின் ‘அயோத்தியா’ கண் காட்சியும், (ஜேம்ஸ் லேய்ன் விஷயத்தில்) புனேயின் பண்டார்கர் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனமும், எம்.ஃ.ப். உசேனின் ‘கும்பாவும்’ (குகை) இதற்கு முன் தாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப் பிரபலமான நவீன ஓவியர் உசேனை நாட்டை விட்டே விரட்டிவிட்டது சங்க் பரிவார். சங்க் பரிவாரின் செயல்பாடுகள் நம் மக்களாட்சியை உண்மையிலேயே சீரழிக்கின்றனவா? அவ்வாறானால் சங்க் பரிவாரின் செயல்பாட்டை நாம் எப்படித் தடுக்க முடியும் என்ற கேள்விகளை யெல்லாம் இந்தச் சமூகம் கேட்கவில்லை. மாறாக, இக்குற்றங்களை ‘சாதாரண நிகழ்வுகள்’ என்று ‘உள்வாங்கி’விட்டது. ‘பெரும்பான்மை’ மக்களின் பிரதிநிதியாகப் பேசுகிறோம். ‘உண்மையான இந்தியா’ (அப்படி ஒரே ஒரு இந்தியா இருப் பதாகக் கூறிக்கொண்டு) சார்பாகப் பேசுகிறோம். ‘இந்தியப் பண்பாடு’, ‘இந்திய விழுமியங்கள்’ சார்பாகப் பேசுகிறோம். ‘இந்தியாவின் மனம்’ சார்பாகப் பேசுகிறோம் என்றெல்லாம் கூறிக் கொள்பவர்களின் வன்முறையும், சகிப்பற்ற தன்மையும் சகித்துக் கொள்ளப்படும்போதும், ஏற்றுக் கொள்ளப்படும் போதும் சகிப்புத் தன்மையின் ஆன்மாவை நாம் அழித்துவிடுகிறோம்.
சுதந்திரம், சமூக வாழ்வில் சுதந்திரத்தின் தேவை, பொதுஉலகின் நலன் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளாதவர்களாக உள்ளோம். யதார்த்தத் தையும் வேறுபட்ட பண்பாடுகளையும், நம்பிக் கையையும் பல்வேறு கோணங்களிலிருந்து பார்ப்பதை ஏற்றுக்கொள்ள இயலாத சமூகமும், அச்சம், பதற்றம் இல்லாமல் வேறுபாடுகளை விவாதிக்க முடியாத சூழலும் ஆரோக்கியமற்றவை. வேறுபாடு களுக்கும், பன்முகத் தன்மைக்கும் மதிப்பளிப்பது. அவற்றை ஏற்றுக்கொள்வது மக்களாட்சியின் அத்தியாவசியத் தேவைகள். சுதந்திர, சமூக விழிப் படைந்த நிலையிலிருந்து விலக்கி, மதிப்பற்ற ‘பெரும்பான்மை’ அரைகுறை ‘மக்களாட்சி’ முறையை நோக்கி நம்மை வலதுசாரிகள் ஓட்டு கிறார்கள்.
அண்மைக் காலத்தில் பல இஸ்லாமிய தர்காக்கள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்திய ஒழுங்குபடுத்தப்பட்ட தன்னுடைய அமைப்பு களில் இருக்கும் உறுப்பினர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்துத்வா வலதுசாரிகளின் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். இதனை அக்டோபர் 2007 அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு நிகழ்வின் குற்றப் பத்திரிகை அம்பல மாக்கிவிட்டது. ராஜஸ்தான் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இக்குண்டு வெடிப் பிற்குக் காரணமான ஐந்து பேரின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. இதில் நான்கு பேர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்.
காவல்துறை குண்டு வெடிப்பைத் திட்டமிடுவதற்காகக் கூடிய ரகசியக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர் என்று இந்திரேஷ் குமார் என்பவரைச் சந்தேகப்படுகிறது. இந்திரேஷ் குமார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழு நேரப் பணியாளர்; அதன் தேசிய செயற்குழுவின் உறுப்பினர்; இவ்வியக்கத்தின் முக்கியமான பதினைந்து பிரச்சாரக்குகளில் ஒருவராகக் கருதப்படுபவர். ஹர்ஷத் சோலன்கியுடன் சேர்ந்து அஜ்மீர் குண்டைத் தயாரித்து வெடிக்கச் செய்த சுனில் ஜோஷி என்ற முன்னாள் பிரச்சார கருடன் இந்திரேஷ் குமார் எப்பொழுதும் தொடர்பில் இருந்தார்.
சோலன்கி ராஜஸ்தான் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் சோலன்கி முக்கிய குற்றவாளி என்பது நம்மை அச்சுறுத்தும் உண்மை. இந்திரேஷ் குமாரைத் தவிர்த்து, ‘ஜெய் வந்தே மாதரம்’ என்றழைக்கப்படும் மற்றொரு சந்தேகத்திற்குரிய இயக்கத்துடன் தொடர்புடைய மற்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் உண்டு. செப்டம்பர் 2006 மாலே கான் குண்டுவெடிப்புக்கும், மே 2007 ஹைதராபாத் மெக்கா மஜ்ஜித் குண்டு வெடிப்புக்கும் பின்னால் இருந்த ‘அபிநவ் பாரத்’ என்ற அமைப்புடன் தொடர்புடைய இயக்கம்தான் ‘ஜெய் வந்தே மாதரம்’. லெப்டிணன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பிரக்யா சிங், ராம்ஜி குல்சங்கரா, ‘சுவாமி’ அசீமானந்த் ஆகியோரும் இதில் முக்கியமானவர்கள்.
இந்திரேஷ் குமாருக்கு எதிராக ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நேரத்தில் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பயங்கரவாத செயல்களுடன் இணைப்பதற்கான ‘அரசியல் சதி’ முயற்சியில் மைய அரசு இறங்கியுள்ளதாகக் கூறிக் கொண்டு, அதற்கெதிரான பிரச்சாரத்தைத் தொடங்க ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. இத்தகைய பயங்கரவாதத் தொடர்பு நிரூபிக்கப்படுவதைத் தடுக்க அரசியல் நெருக்கடியையும் அச்சுறுத்தலையும் சங்க் பரிவார் பயன்படுத்துகிறது. இந்தத் தொடர்பு நிரூபிக்கப்பட்டால், 1948-1949இல் காந்தி படு கொலையில் ஆர்.எஸ்.எஸ். குற்றஞ்சாட்டப்பட்டதைப் போன்ற நிலை ஏற்படும்; ‘தேசியம்’, ‘நாட்டுப் பற்று’ என்றெல்லாம் தன்னுடைய கொள்கை களுக்கு நியாயம் கூறும் அதன் முகம் கிழியும்.
தன்னுடைய குறுகிய அரசியல் குறிக்கோள் களுக்காகச் சிறுபான்மை சமயத்தவரைக் கொல்வதைச் சரியென்று நம்பும் வன்முறை அரசியல் இயக்கத்தின் யுக்திகள் அருவருப்பானவை; அரசியல் திட்டமெதுவும் தங்களுக்கு இல்லை யென்று மறுத்து ‘பண்பாட்டு தேசியம்’ என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வது இவர்களுக்கு வசதியாக இருக்கிறது. வலதுசாரி இந்துத்வாவின் பயங்கர வாதம் இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதத்தைவிட எந்த வகையிலும் மேலானதல்ல; அரசால் மென் மையாகக் கையாளப்படுவதாலும், காவல் துறைக்குள் வெற்றிகரமாக ஊடுருவியிருப்பதாலும் வலதுசாரி இந்துத்வா பயங்கரவாதம் இஸ்லாமிய பயங்கர வாதத்தைவிட ஆபத்தானது. இந்துத்வா பயங்கர வாதத்தைத் தண்டிப்பதுதான் நம் மக்களாட்சியின் வலுவை நிரூபிக்கும். இதில் தவறிவிடக் கூடாது.
நன்றி : நியூ ஏஜ்
- பிரவுல் பித்வாய்
தமிழில் : ரகு அந்தோணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக