படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

8 அக்., 2011

நீதி சிறையில், அநீதி வெளியில்-- அசோகன் முத்துசாமி

நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அவர் மீது 2002ம் ஆண்டு கலவரக் கறை படிந்திருக்கிறதே என்று ‘புதிய தலைமுறை’ தொலைக் காட்சியின் நிருபர் சோ ராமசாமியிடம் கேட்கிறார். எந்த நீதிமன்றமாவது அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறதா என்று சோ பதில் கேள்வி கேட்கிறார்.
உண்மைதான். இன்னும் எந்த நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லைதான். அப்படியொரு தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு மோடி விடுவாரா என்பதுதான் இப்போது பிரச்சனையே.
மதப் படுகொலைப் புகார்களில் பல எடுத்துக் கொள்ளப்படவேயில்லை என்பதும், அதை மீறி காவல்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகார்களில் பலவற்றுக்கு முதல் தகவல் அறிக்கையே எழுதப்படவில்லை என்பதும், அப்படி எழுதப்பட்ட வழக்குகளில் பலவற்றுக்குக் குற்றப் பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் ஏற்கனவே தெரிந்ததுதான். அதையும் மீறி வழக்கு விசாரணை என்கிற கட்டத்தை அடைந்த பிரபலமான பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்பட சில வழக்குகளில் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடித்தார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான்.
ஆனால், இவை எதுவும் மோடி மீது நேரடியாகக் குற்றம் சாட்டும் வழக்குகள் அல்ல. மோடியால் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பிரமாணப் பத்திரம்தான் மோடி மீது நேரடியாகக் குற்றம் சாட்டுகிறது. அதன் ஒரு முக்கியமான பகுதி பின்வருமாறு:
“...கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களை அகமதாபாத்திற்கு எடுத்து வருவது என்கிற முடிவும், விஎச்பி பந்தை ஆதரிப்பதாக பாஜக அறிவித்திருப்பதும் அகமதாபாத்திலும் மாநிலம் முழுவதிலும் மத வன்முறைகள் வெடிப்பதற்கு நிச்சயம் இட்டுச் செல்லும் என்று அந்தக் கூட்டத்தின் முடிவில் அவருக்கு (மோடி) புரிய வைக்க முயற்சிக்கப்பட்டது. அத்தகைய ஒரு நிலைமையைச் சமாளிக்கத் தேவையான ஆட்கள் குஜராத் காவல்துறையிடம் இல்லை என்பதையும் அவருக்குப் புரிய வைக்க முயற்சிக்கப்பட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு நான் அளித்த சாட்சியத்தின் அது தொடர்பான பகுதி பின்வருமாறு கூறுகிறது:
“பந்திற்கான அறைகூவல் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது என்றும், கோத்ராவில் கரசேவகர்கள் எரிக்கப்பட்டது போன்ற சம்பவங்களைச் சகித்துக் கொள்ள முடியாது என்பதால் பந்தை ஆதரிப்பது என்று கட்சி முடிவு செய்து விட்டது என்றும் முதலமைச்சர் நரேந்திர மோடி கூறினார். மேலும், குஜராத்தில் மதக் கலவரங்களைச் சமாளிக்கும் விஷயத்தில் மாநிலக் காவல்துறை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சமமாக இருக்க வேண்டும் என்கிற கோட்பாட்டை நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வருகின்றது என்றும், இப்போது இது போன்ற சம்பவங்கள் இனி எப்போதும் நடக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் முஸ்லிம்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் வலியுறுத்திப் பேசினார். இந்துக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிப்பது தவிர்க்க முடியாதது’’ (ஐபிஎன் லைவ் தொலைக் காட்சி இணையதளம்).
பிணங்களைக் கொண்டு வந்து ‘இந்துக்களின்’ கோபத்தை அதிகரிப்பது, பந்த் நடத்தி கலவரம் செய்வதற்குத் தோதான சூழலை உருவாக்குவது, காவல்துறையினர் தலையிட்டு காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்பதற்காக கண்டு கொள்ளாதீர்கள் என்று அவர்களுக்கு உத்தரவிடுவது என்று எல்லாவும் திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது.
காவல்துறை கண்டு கொள்ளவில்லை என்பது இப்போது வரலாறு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் குல்பர்க் சொசைட்டி கொலைகள். முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாப்ரி பல முறை அபயக் குரல் எழுப்பியும் காவல்துறை காது கோளாத துறையாக இருந்தது. இந்துத்துவ வெறியர்களால் 69 பேர் கொல்லப்பட்டார்கள்.
மோடி இட்ட வாய்மொழி உத்தரவிற்கு ஆதாரம் சஞ்சீவ் பட்டின் பிரமாணப் பத்திரம்தான். அந்த பத்திரத்தையும் பட் அவர்கள் ஜாப்ரியின் மனைவி தொடுத்திருக்கும் வழக்கிற்கொரு ஆதாரமாகவும்தான் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதில் 2002ம் ஆண்டு மாநில உளவுத் துறை துணை அதிகாரியாகவும், பட்டின் வாகன ஓட்டுநராக இருந்தவருமான கே.டி.பந்தும் சாட்சிக் கையொப்பம் இட்டிருந்தார். பட் 2002ம் ஆண்டு மாநில உளவுத் துறையின் துணை ஆணையராக பதவி வகித்தவர்.
அந்தப் பிரமாணப் பத்திரத்தில் பட் மேலும் பல முக்கியமான விவரங்களைக் கொடுத்துள்ளார். 2002 பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டி எரிக்கப்படுவதற்கு இட்டுச் சென்ற உண்மைச் சம்பவங்கள் -பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் கோத்ராவில் நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அந்த இரண்டு நாட்களில் கோத்ரா நகரின் அனைத்து தொலை பேசிகளின் அழைப்பு விவரங்களும் உளவுத் துறை அதிகாரி என்கிற வகையில் அவரிடம் இருந்தன. அதற்குப் பின்னர் மோடி நடத்திய கூட்டம், அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைகள் ஆகியவை தொடர்பான ஆதாரங்களும் அவரிடம் இருந்தன. காவல்துறை உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளின் தொலை பேசி அழைப்புகள், அவர்கள் செய்த தவறுகள் மற்றும் அவர்கள் செய்யத் தவறியவை குறித்த விவரங்களும் அவற்றில் அடங்கும். அவற்றைஎல்லாம் அவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
பிரச்சனை என்னவென்றால் எஸ்ஐடி அதன் அடிப்படையில் மேற்கொண்டு தொடர வேண்டிய விசாரணையை பாரபட்சமின்றி நடத்தவில்லை. அது மட்டுமின்றி, மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த தகவல்களை ‘சம்பந்தப்பட்டவர்களுக்குத்’ தெரிவித்தும் விட்டது. (போதாக்குறைக்கு அது பத்திரிக்கைகளுக்கும் கசிந்துவிட்டது. இவ்வருடம் பிப்ரவரி மாத டெகல்கா இதழ்களில் இந்த விவரங்கள் வெளி வந்துவிட்டன என்பதையும் பட் இந்த பத்திரத்தில் தெரிவித்துள்ளார்).
விளைவு? மோடி அரசின் உயரதிகாரிகள் பட்டை மிரட்டத் துவங்கினர். பல வகையான தொல்லைகள் கொடுத்தனர். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பையும் குறைத்து, கிட்டத்தட்ட பாதுகாப்பே இல்லாமல் செய்து அச்சுறுத்தினர். ஒன்றும் பலிக்கவில்லை என்றவுடன் கே.டி.பந்த்தை எஸ்ஐடியே மிரட்டியுள்ளது. இவ்வருடம் ஏப்ரல் 5ம் தேதி எஸ்ஐடியால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பந்த் கிட்டத்தட்ட குற்றவாளி போல் நடத்தப்பட்டிருக்கிறார். அவரைக் கைது செய்து விடுவோம், பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளார்கள். மற்ற சாட்சிகளும் இது போல் மிரட்டிப் பணிய வைக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார் பட். நிற்க.
இப்போது இந்த பந்த் என்பவர்தான் பல்டி அடித்துவிட்டார். மிரட்டினால் அவரும்தான் என்ன செய்வார்? பட் என்னை மிரட்டி பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார் என்று குற்றம் சாட்டியிருக்கின்றார். அதன் பேரில் பட் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வீடு இதுவரை இரண்டு முறை சோதனையிடப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பட்டின் நேர்மைக்கு ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம். தற்போது அவர் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார். அதற்கு முன்னதாக நீதிமன்றக் காவலில் இருக்கும் அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மோடி அரசாங்கம் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு செய்திருந்தது. ஜாமீன் கேட்ட பட்டிற்கு செப்டம்பர் 4ம் தேதி நீதிமன்றம் ஒரு ஆலோசனை சொன்னது. காவல்துறையின் காவலில் மூன்று மணி நேரம் இருந்து வருவதற்குச் சம்மதித்தால், அந்த நேரத்தில் அவர் தன்னுடைய வங்கி லாக்கர்களில் என்ன இருக்கிறது என்று காவலர்களுக்குக் காட்டினால் (பட் தன்னுடைய லாக்கர்களில் குஜராத் மதப் படுகொலைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை வைத்திருக்கலாம் என்று மோடியின் காவல்துறை ‘பயப்படுகிறது’) உடனடியாக ஜாமீன் வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் பட் அதை மறுத்துவிட்டார். இந்த குண்டர்களுடன் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்றும், அரசாங்கம் தனக்கு என்ன தீங்கு செய்தாலும் அதைச் சகித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், எவ்வளவு நாள் வேண்டுமானாலும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தாலும் இருப்பேன், கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். (இந்தக் கட்டுரை வெளிவரும்போது அவருக்கு ஜாமீன் கிடைத்ததா இல்லையா என்பது தெரிந்திருக்கலாம்).
பட்டின் கைது மதப் படுகொலை வழக்குகளின் சாட்சிகளுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஒன்றாக அறிக்கை விட்டுள்ளன. அதிலும், இஷான் ஜாப்ரின் மனைவி ஜாகியா ஜாப்ரி தொடுத்திருக்கும் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் பட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


உண்ணாவிரதம், பேரணி, இப்போது  கைது என்று மோடி தொடர்ந்து நீதிமன்றங்களையும், சாட்சிகளையும், நேர்மையான காவல்துறை அதிகாரிகளையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். சோ சொன்னது போல் ஒரு வேளை மோடி எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாமல் போகலாம். ஆனால், சங் பரிவாரிகள் தங்கள் வழக்கம் போல் ‘முஸ்லிம்களுக்கு எப்படிப் பாடம் புகட்டினோம் பாருங்கள்’ என்று நீதிமன்றத்திற்கு வெளியே சில இடங்களில் ரகசியமாகவும், சில இடங்களில் பகிரங்கமாகவும் பெருமை பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.
நன்றி: சாளரம்

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி