படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

28 செப்., 2011

உண்ணாவிரதம் என்னும் தேசிய நோய்

உண்ணாநிலைப் போராட்டம் இன்று இந்தியாவில் அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தையாக உள்ளது. செப் 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் குசராத் முதல்வர் நரேந்திர மோடி மதநல்லிணக்கத்திற்காக உண்ணாநிலை இருந்திருக்கிறார். இவரது இந்த மகத்தான போராட்டத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அதே போல், அன்னா அசாரே என்னும் இந்தியன் தாத்தா ஊழலை ஒழிக்க உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டார். ரமணா படத்தில் வசனம் பேசி விஜயகாந்தும், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதமிருந்து அன்னா அசாரேவும் ஊழலை ஒழித்து விடுவார்கள் என்று இளைய தலைமுறை நம்புகிறது என்றால் அதைவிட கேவலம் என்ன இருக்கிறது?

உண்ணாவிரதம் இருக்கும் இவர்களது யோக்கியதையைப் பற்றி நாம் பேசுவதற்கு முன்னால், உண்ணாநிலை என்கிற போராட்ட வடிவமே சரியான வழிமுறை கிடையாது என்பதே என் கருத்து. உண்மையான போராட்ட குணத்தை மக்கள் பெற்று விடுவதை தடுக்கும் வழிமுறையே உண்ணாநிலைப் போராட்டம். கருத்தியல் வடிவிலும், உடல் உழைப்பின் மூலமும், தங்களது கோரிக்கைகளை, சிந்தனைகளை மக்களிடமும், அரசிடமும் எடுத்துரைத்த போராட்ட வடிவங்களை மறக்கடிக்கச் செய்வதற்கே இந்த உண்ணாநிலை உதவும். ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் இந்த நாட்டில் உண்ணா நிலையை போராட்ட வடிவமாக கையிலெடுக்கும் இவர்கள் அடித்தட்டு மக்களின் விடுதலைக்கு எதிரானவர்கள். விவசாயிகள், நெசவாளர்கள் தங்கள் தொழில் முடக்கம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிற சம்பவம் அன்றாட நிகழ்வாக இருக்கிறது. அவர்களை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியது எது? பசி.
உணவின்மை இங்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் முறையாக இருக்கும் உணவின்மை பிரச்சனையை, வலிந்து ஏற்றுக்கொண்டு அதனை ஒரு போராட்ட வடிவமாக அறிவிப்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம். அன்னா அசாரே மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாத விவசாயிகளும், தொழிலாளர்களும், இனிமேல் உணவு கிடைக்கும் வரை நாங்கள் உண்ணப் போவது இல்லை என்று அறிவித்து உண்ணாநிலை போராட்டம் அறிவிக்க வேண்டும். தங்களுக்கு உணவில்லாமல் செய்துவிட்ட முதலாளித்துவ அமைப்பை எதிர்த்து தொழிலாளர்கள் போராடக் கூடாது. இன்னும் சற்று விரிவாக சொல்ல வேண்டுமானால், ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக லெனின் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். வன்கொடுமைக்கு எதிராக தாழ்த்தப்பட்டோர்கள், இசுலாமியர்கள் மற்றும் பெண்கள் உண்ணாநிலை போராட்டம் அறிவிக்க வேண்டும். இனி வரும் இளைய தலைமுறையினருக்கு உண்ணாவிரதம் குறித்து உருவாக்கப்படும் கற்பிதம் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கக்கூடியது.
உண்ணாவிரத நாடகங்களும், ஊடக மேடையும்:
உண்ணாவிரத நிகழ்ச்சியை வீரியமான போராட்டமாக உருவாக்கப்படுத்துவதில் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. கார்ப்ரேட்டுகளின் முகவராக அடையாளப்படும் அன்னா அசாரேவின் உண்ணாவிரத்தையும், மதவெறியர் நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்தையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுப்போய் சேர்த்ததில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவர்கள் உண்ணா விரதம் அறிவித்த பிறகு ஊடகங்கள் வருகின்றனவா (அல்லது) ஊடகங்கள் அறிவித்த பிறகு, இவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை அறிவிக்கின்றார்களா என்று நாம் சந்தேதிக்க வேண்டியுள்ளது. மூவர் தூக்குத் தண்டைக்கு எதிரான போராட்டம், செங்கொடியின் உயிர்த் தியாகம் போன்ற நிகழ்வுகளை திட்டமிட்டு மறைத்த சில ஊடகங்கள், நரேந்திரமோடி, அன்னா அசாரே ஆகியோரின் உண்ணா விரதத்தை மட்டும் பெரிதுபடுத்தி காண்பிக்கின்றன. ஏனென்றால், இவர்களது உண்ணாவிரதம் சமூக மாற்றத்திற்கான நிகழ்வு அன்று; மாறாக சமூகம் விழிப்புணர்வு பெற்றுவிட கூடாது என்பதற்காக நடத்தப்படும் நாடகம். அந்நாடகத்திற்கான மேடையாக இந்த ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.
உண்ணாவிரதம் என்னும் ஆயுதம்:-
உண்ணாவிரதம் என்பது இவர்கள் குறிப்பிடுவது போல் ஓர் அயுதம்தான். அன்னா அசாரே, நரேந்திரமோடி போன்றோர் உண்ணாநிலை இருக்கும்போது, அவர்களது உண்மையான முகத்தினை மறைத்து, காப்பாற்றும் கவசமாக செயல்படுகிறது. இரோம் சர்மிளா, சானு போன்ற போராளிகள் உண்ணாநிலை இருக்கும்போது அரசு பயங்கரவாதமும், ஊடகங்களும் திட்டமிட்டு மறைக்கின்றன. ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக சிலர் மேற்கொள்ளும் உண்ணாவிரதம் அவர்களைக் கொல்லும் ஆயுதமாக செயல்படுகிறது. வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் அடித்தட்டு மக்களின் விடுதலைக்கு எதிராகத்தான் உண்ணாநிலை என்னும் ஆயுதத்தை நம் எதிரிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கும். தாழ்த்தப்பட்டோரின் இரட்டை வாக்குரிமைக்கு எதிராகத்தான் காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். 81 வருடங்களுக்கு முன் காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதம் அம்பேத்கருக்கு விடுத்த மிரட்டல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக காந்தியார் தொடுத்த வன்முறை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மதங்களும் உண்ணாநிலையும்:
கடவுளின் அன்பைப் பெறவும், ஏழைகளின் பசியை உணரவும் மதங்கள் உண்ணாவிரதத்தை அறிவுறுத்துகின்றன. இதன் பின்னணி என்ன? பசிக்கான மூல காரணத்தையும் அதை களைவதற்கான சமூகப் பணியினையும் மனிதன் மேற்கொள்ளக் கூடாது என்பதே. பிரார்த்தனை, உண்ணாநோன்பு போன்றவை புரட்சியை மட்டுப்படுத்தும் வடிவங்களே. ஆகவே தான், மதங்களும், அஹிம்சைவாதிகளும் அதனை தூக்கிப் பிடிக்கின்றனர். காந்தியடிகளின் உண்ணாவிரதம் அவரது இந்து மதப்பற்றின் வெளிப்பாடே.
தமிழர் போராட்டங்களும், உண்ணாவிரதமும்
தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக உண்ணாநிலை இருந்து உயிர் துறந்த சங்கரலிங்கனார், ஈழத்துப் போராளி திலீபன் போன்றோர் கூட உண்ணாநிலை என்னும் ஆயுதத்தை கையியெடுத்தனர்.
ஆனால், அவர்களது உண்ணாவிரதம் அவர்களைக் கொல்வதற்குப் பயன்பட்டதேயொழிய அவர்களது கோரிக்கைகள் வெல்வதற்கு பயன்படவில்லை என்பதை நாம் உணர வேண்டும். நமக்கான வாழ்வாதார உரிமைகளை நாம் எதிரிகளிடம் கேட்டு கொண்டிருக்க முடியாது. மக்களை அரசியல்படுத்துவதன் மூலம் மட்டுமே நம் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், உண்ணாநிலை என்கிற வடிவம் நமக்கானது இல்லை. நமக்கு சாதகமான தீர்வையும் அது தரப் போவதில்லை. ஒருவேளை, உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமாக நாம் உருவகப்படுத்தினால் வருங்காலத்தில் கீழ்க்காணும் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
1. மாட்டிறைச்சி உண்ணும் தலித்துகளை தூக்கிலிட வேண்டும் - பாபா குரு ராம்தேவ் உண்ணாவிரதம்.
2. இராமர் கோயில் கட்டும் வரை உண்ணாவிரதம் - அத்வானி அறிவிப்பு
3. சாதிவாரியான இட ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி – சோ உண்ணாவிரதம்.
4. இசுலாமியர்களை மும்பையிலிருந்து விரட்டும் வரை பால்தாக்கரே உண்ணாவிரதம்.
5. ஓகேனக்கலை கர்நாடகத்திற்கு கொடுக்கும் வரை சதானந்த கவுடா உண்ணாவிரதம்.
மேற்கூறிய உதாரணங்கள் ஏதோ என்னுடைய மிகைப்படுத்தப்பட்ட கற்பனை அல்ல, உண்ணாவிரதம் குறித்த புனிதக் கோட்பாடும், உண்ணாவிரதமிருப்பவர் குறித்த கதாநாயக பிம்பமும் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டால், கண்டிப்பாக இது போன்ற சம்பவங்கள் நிகழும். உண்ணாவிரதம் ஒரு சண்டித்தனம் என்ற பெரியாரின் கூற்று எவ்வளவு பெரிய உண்மை என்பதை அம்பேத்கர் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்ந்திருப்பார். உண்ணாவிரதம் எதிரிகளை மிரட்ட கோழைகள் பயன்படுத்தும் ஆயுதம் என்பதற்கு காந்தியாரின் வாழ்க்கையே சாட்சி. நாம் சமூகத்தை மிரட்டுவதற்கான அரசியலை கையிலெடுக்க வேண்டாம். சமூக மாற்றத்திற்கான அரசியலே நமது கொள்கை. அக்கொள்கையின் அடிப்படையில் மக்களை ஆர்ப்பாட்டக்காரர்களாகவும், போராட்டக்காரர்களாவும் உருவாக்க உறுதி எடுப்போம். சுபர்மதி, ராம்லீலா மைதான பிம்பங்களை உடைத்தெறிவோம். மோடி மஸ்தான் முகத்திரையை கிழித்தெறிவோம்.


நன்றி: கீற்று

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி